நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கோரி ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கடிதம்..!!

டெல்லி: லண்டனில் பேசிய அம்சங்கள் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்றத்தில் பேச அனுமதி அளிக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.  நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து 6 நாட்களாக இரு அவைகளும் முடங்கியுள்ளது. லண்டனில் இந்திய ஜனநாயகம் பற்றி பேசியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜவினர் அமளி செய்தனர். பதிலுக்கு அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். இந்நிலையில், தொடர் அமளி காரணமாக தொடர்ந்து 6வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.

லண்டனில் இருந்து திரும்பியதும் கடந்த வாரம் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து மக்களவையில் பேச ராகுல்காந்தி அனுமதி கோரியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது; அங்கு பேச அனுமதி கிடைக்குமா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு எம்.பி. என்ற முறையில், முதலில் நாடாளுமன்றத்தில் பதில் சொல்வதுதான் எனது கடமை. நான் நாட்டுக்கு எதிராகவோ, நாடாளுமன்றத்துக்கு எதிராகவோ எதுவும் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பேசுவேன். அனுமதிக்காவிட்டால், வெளியே பேசுவேன். நான் பேசுவது பாரதிய ஜனதா விரும்புவதுபோல் இருக்காது என்று அவர் கூறினார். பொதுவெளியில் தனது லண்டன் பேச்சை குறித்து எந்த விளக்கமும் ராகுல் காந்தி அறிவிக்காத நிலையில் நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கோரி ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.