"நான் நலமுடன் இருக்கிறேன் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்!" – நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன் வேண்டுகோள்!

`ஏலே, சாமி நம்ம சாதிக்காரப் பயல்லே.. பேசறப்ப காது ஆடுச்சே கவனிச்சியா’ என `சாமி’ படத்தின் வசனத்தின் மூலம் அதகளப்படுத்தி ஒரு நகைச்சுவை கலந்த வில்லனாக தமிழ் ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர் பழம்பெரும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன்.

1999 – 2004 வரை ஆந்திரப்பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த இவர் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து முத்திரை பதித்தவர். ‘சாமி’, ‘குத்து’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘கோ’, ‘சகுனி’ போன்ற படங்களின் பெயரைக் கேட்டாலே இவரது வசனங்களும் பெயரும் ஞாபகம் வந்துவிடும்.

கோட்டா ஸ்ரீனிவாசன்

ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவைச் சேர்ந்த இவருக்கு தற்போது 75 வயதாகிறது. இப்போது இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வெடுத்துள்ளார். சமீபத்தில் இவர் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா நடித்த ‘Kabzaa’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கோட்டா ஸ்ரீனிவாசன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் இறந்துவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.

இது சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தான் நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன்.

அதில், தான் நலமுடன் இருப்பதாகவும் இதுபோன்ற பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், “புகழ் அல்லது பணம் வேண்டுமென்றால், அதைச் சம்பாதிக்கப் பல வழிகள் உள்ளன. அதற்காக இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது சரியல்ல” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.