பட்ஜெட் தாக்கலில் வேளாண்மை அம்சங்கள் – முத்தரசன் பாராட்டு..!

தமிழ்நாடு பட்ஜெட்டின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தொடர்பான அறிக்கையை பாராட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

வேளாண்மை நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன்பு தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள், வேளாண்துறை வல்லுநர்களின் கருத்துக்களை அமைச்சர் நேரடியாக கேட்டறிந்ததும், கருத்துக் கேட்புக் கூட்டங்களில் வந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை இந்த மாநிலத்திலேயே உற்பத்தி செய்ய ஊக்குவிப்பு திட்டம், முக்கிய வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது, தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுபாடின்றி எல்லாக் காலங்களிலும் சீராக கிடைக்கச் செய்வது, அதிகமாக விளையும் பயிர்களை கருத்தில் கொண்டு, அவைகளை மதிப்புக்கூட்டி மேம்படுத்தும் தொழில்களை தொடங்குவது, விவசாயிகளுக்கு ஆலோசனை கூற வட்டாரத்துக்கு ஒரு விஞ்ஞானி நியமனம் செய்வது என்று பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரும்பு, நெல் போன்ற வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு ஊக்குவிப்புத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு அறிவித்துள்ள ஊக்கத் தொகை மேலும் அதிகரிக்க வேண்டும்.

விவசாய கிணறுகளுககான மின் இணைப்பு, மும்முனை மின்சாரம் வழங்கல், நீர்வளத்துறை மேம்பாடு, அங்கக வேளாண்மை ஊக்குவிக்க “நம்மாழ்வார் விருது”, பயிர் கடன் வழங்க நிதி, வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம், பத்து லட்சம் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவதன் மூலம் காலநிலை சீரமைப்புக்கு உதவுவது என அனைத்துத் தரப்பினரும் மகிழ்ந்து வரவேற்கும் நிதிநிலை அறிக்கை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், வேளாண்மை – உழவர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.