டெல்லி முழுவதும் ஒட்டப்பட்ட 'மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்' சுவரொட்டிகள்

AAP vs BJP: பாஜக தலைமையகம் அமைந்துள்ள தீன் தயாள் உபாத்யாய் மார்க் உட்பட டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான ‘மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சாவோ’ (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே புதிய அரசியல் போர் வெடித்துள்ளது. காவல்துறை இந்த வழக்கில் 100 எஃப்ஐஆர்களை பதிவு செய்து 6 பேரைக் கைது செய்துள்ளது. டெல்லி காவல்துறை கைது நடவடிக்கையை கண்டித்து “இது உச்சப்பட்ச சர்வாதிகாரம்” என ஆளும் கட்சியினர் (AAP) சாடிவருகின்றனர். 

டெல்லி முழுவதும் மோடிக்கு எதிராக இரவோடு இரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுவரொட்டிகளில் அவை அச்சிடப்பட்ட அச்சகத்தின் விவரங்கள் இல்லை. பிரிண்டிங் பிரஸ் சட்டம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு காவல்துறை அதிகாரி நேற்று தெரிவித்தார்.

மத்திய டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சென்ற ஒரு வேனை இடைமறித்து போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதிகாலையில் சுமார் 2,000 சுவரொட்டிகளை ஏற்றிச் சென்ற வேனைக் கைப்பற்றிய போலீஸார், அதில் இருந்த ஆறு பேரை போலீசார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. 

விசாரணையின் போது, கைது செய்யப்பட்டவர்கள் தங்களை ஒரு அரசியல் கட்சி சுவரொட்டிகளை ஒட்டச் சொன்னது தெரியவந்துள்ளது. அவர்கள் ஏற்கனவே டெல்லி முழுவதும் சுமார் 2,000 சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும் பல சுவரொட்டிகள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தேசிய தலைநகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியது யார்? மற்றும் இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.