‘தகுதிவாய்ந்த’ மீம் வீடியோவால் சவுக்கு சங்கர் – பிடிஆர் இடையே மோதல்! ட்விட்டரில் நடப்பது என்ன?

சமூக வலைதள பிரபலமான சவுக்கு சங்கர் தொடர்ந்து ஆளும் கட்சியை விமர்சித்து ட்வீட்டுகளை போட்டு வருகிறார். அதோடு பல்வேறு யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார். இவரது பேட்டிகள் எப்போதுமே பல லட்சம் வியூஸ்களை பெறும். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தமிழக பட்ஜெட் தாக்கலின் போது தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து பலரும் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகள் யார் என கேள்வி எழுப்பி வந்தனர். அதோடு இதுகுறித்த மீம்ஸ்களும் வைரலானது. 

இந்த சூழலில் சவுக்கு சங்கரின் அட்மின் வாய்ஸ் ஆஃப் சவுக்கு என்ற ட்விட்டர் பக்கத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடியை வைத்து வீடியோ மீம் ஒன்று வெளியானது. அதனுடன் இப்படித் தான் மு.க.ஸ்டாலின் மற்றும் பிடிஆர் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளை தேர்ந்தெடுப்பார்கள் என எழுதப்பட்டிருந்தது.

இந்த மீம் உடனே மிகப்பெரிய அளவில் வைரலானதோடு, அதிகளவில் ரீ-ட்வீட்டும் செய்யப்பட்டது. இதனையடுத்து புகாரின் பேரில் சவுக்கு சங்கரின் அட்மின் பிரதீப் இரவு 11.30 மணி அளவில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள சவுக்கு சங்கர், பிடிஆர் அழுத்தம் காரணமாக தமிழக போலீஸ் எனது அட்மினை கைது செய்துள்ளனர். தன்னை யாரும் விமர்சிக்க கூடாது என அவர் நினைக்கிறாரா என எழுதி பிடிஆரை டேக் செய்திருந்தார்.

இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள அமைச்சர் பிடிஆர், “இந்த கற்பனைவாதியின் சித்தப்பிரமையை நான் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் இது 100 சதவீதம் பைத்தியக்காரத்தனம் என்பதால் பதிலளிக்கிறேன். இந்த அட்மின் இருப்பது எனக்குத் தெரியாது. அதனால் அந்த மீம் வீடியோவை நான் பார்க்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட DVAC Clerk தமிழக பட்ஜெட் குறித்து விமர்சிப்பது என்னை தொந்தரவு செய்யத் தொடங்கினால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என எழுதியுள்ளார். 

தற்போது இந்த விவகாரம் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.