தூக்கிலிடுவதை விட வலி குறைந்த தண்டனைக்கு… மாற்று என்ன? | What is the alternative to a less painful punishment than hanging?

புதுடில்லி: துாக்கிலிடுவதைத் தவிர, மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான மாற்று வழிகள் குறித்து விவாதிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் நிபுணர் குழுவை அமைக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

‘மரண தண்டனையை நிறைவேற்ற துாக்கிலிடுவது வலி நிறைந்த செயல்பாடு. அதனால், இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமர்வு கூறியதாவது:

ஒருவர் கண்ணியமாக இறப்பதற்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதை ஏற்கிறோம். துாக்கிலிடுவது, வலி நிறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த வகை எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த தகவல்கள், ஆய்வுகள் உள்ளதா?

துாக்கிலிடுவதைத் தவிர, வலி குறைந்த மாற்று வழிகள் உள்ளதா? அவை குறித்த தகவல்கள், புள்ளி விபரங்கள், ஆய்வு தகவல்களை சேகரிக்க வேண்டும். இது தொடர்பான விவாதத்தை மத்திய அரசு துவக்க வேண்டும்.

துாக்குக்கு மாற்றாக, துப்பாக்கியால் சுடுவது, விஷ ஊசி செலுத்துவது, மின்சார நாற்காலியைப் பயன்படுத்தலாம் என, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த முறைகளில் எந்தளவுக்கு வலி குறைவாக இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் தேவை. தேவைப்பட்டால் இந்த விஷயம் குறித்து ஆராய, நிபுணர் குழுவை அமைக்கலாம்.

சிறந்த மாற்று வழிகள் குறித்து முடிவு செய்த பிறகே, துாக்கிலிடுவதை சட்டவிரோதம் என்று அறிவிப்பது தொடர்பாக ஆராயப்படும்.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை, மே 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தண்டனை குறைப்பு

தமிழகத்தின் கடலுார் மாவட்டத்தில், 2009ல், 7 வயது பள்ளி மாணவனைக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டி கொலை செய்ததாக, சுந்தர்ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை சென்னை உயர் நீதிமன்றம், 2010ல் உறுதி செய்தது. இதை உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் ௫ம் தேதி உறுதி செய்தது.இந்நிலையில், தண்டனையை குறைக்கக் கோரி சுந்தர்ராஜன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:இது, மிகவும் கொடூரமான கொலை என்பதில் சந்தேகம் இல்லை. அரிதிலும் அரிதான வழக்கில் தான், மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், குற்றவாளி திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் ஆராய வேண்டும்.அந்த வகையில், 2009ல் இருந்து சிறையில் இருந்தபோது, இந்த நபரின் நடத்தை சிறப்பாக இருந்துள்ளது. ஆனால், அது குறித்த தகவல் மறைக்கப்பட்டுள்ளது.திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கும் வகையில், இவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. அவர், 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம். தண்டனை குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கக் கூடாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இந்நிலையில், சுந்தர்ராஜனின் நன்னடத்தை குறித்த தகவலை மறைத்ததற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது தொடர்பாக, கடலுார் மாவட்டம் கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு, விளக்க ‘நோட்டீஸ்’ அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.