களத்தில் இறங்கும் தலைமை செயலக சங்கம்; தமிழக அரசுக்கு நெருக்கடி..!

தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் இடம்பெறாததால் இரு தரப்பினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஜாக்டோ-ஜியோ அமைப்பு நாளைய தினம் மனித சங்கிலியில் ஈடுபடுவதாக அறிவித்தது.

இந்த நிலையில், அந்த மனித சங்கிலியில் தலைமை செயலக சங்கமும் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. அது குறித்த அறிவிப்பில், தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு அன்பான வேண்டுகோள்; நாம் பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய உரிமைகள் அனைத்தும், ஆட்சிக் கட்டிலில் இருந்த ஆட்சியாளர்கள் ஏதோ தாமாக முன்வந்து வழங்கியது இல்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களிடம் நமது உரிமைகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு கட்ட போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டே நமது உரிமைகளை மீட்டுள்ளோம் என்பதுதான் வரலாறு.

கடந்த 20.02.2023 அன்று வெளியிடப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதோடு, அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சமூகமானது தமிழக அரசால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக நாம் பெற்று வரக்கூடிய ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படியானது, தற்போது அரசின் கருணைத் தொகையாகவும் / பரிசுத் தொகையாகவும் தற்போது மாறியுள்ளது. இறுதியாக வெளியிடப்பட்ட அகவிலைப்படி அரசாணையானது, இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படி என்பது மாநில அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படாது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

இதோடு நமது வாழ்வாதார கோரிக்கைகள் மற்றும் தலைமைச் செயலகப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீதான அரசின் நிலைப்பாடு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இந்தப் பின்னணியில், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின்

கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ 24.03.2023 அன்று கோரிக்கைகளை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரும் நிகழ்வாக, மனிதச் சங்கிலிப் போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டமானது நாளை 24.03.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு காமராஜர் சாலையில் நடைபெறும். இதில் தலைமைச் செயலகப் பணியாளர்கள் அனைவரும் கோரிக்கை பதாகைகள் ஏந்தி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அனைவரும் ஓரணியில் உரிமைகளை மீட்டெடுக்க திரண்டுள்ளோம் என்ற செய்தியினை தமிழக அரசுக்கு தெரிவிப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.