தமிழகத்தை சேர்ந்த 6 பேர் உட்பட – 106 பேருக்கு பத்ம விருது : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

இந்தியாவில் கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்றபல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 6 பேருக்கு பத்மவிபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த இருளர் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த இவர்கள்,உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விஷமிக்க பாம்புகளை பிடித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருதும், பரதநாட்டியக் கலைஞர் கல்யாண சுந்தரம் பிள்ளை, சமூகசேவை பிரிவில் பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவத்துறை சேவைக்காக கோபாலகிருஷ்ணன் வேலுசாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பத்ம விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு, நாட்டின் 2-வது உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. எஸ்.எம். கிருஷ்ணா கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராகவும், 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவின் ஆளுநராகவும் பதவி வகித்து உள்ளார். இதேபோன்று, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாடகி சுமன் கல்யாண்பூருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. பாலகிருஷ்ண தோஷி (மறைவுக்குப் பின்), இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன், மருத்துவத்துறையைச் சேர்ந்த திலீப் மஹலன்பிஸ் (மறைவுக்குப் பின்), ஸ்ரீநிவாஸ் வரதன் (அறிவியல்துறை), உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் (மறைவுக்குப்பின்) ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

எஸ்.எல்.பைரப்பா (இலக்கியம்), தீபக் தர் (அறிவியல்), ஸ்வாமிசின்ன ஜீயர், கபில் கபூர் (இலக்கியம்), சமூக சேவகி சுதா மூர்த்தி, கமலேஷ் டி படேல் (ஆன்மிகம்) உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் கல்யாண சுந்தரம்பிள்ளை, சமூகசேவகர் பாலம்கல்யாண சுந்தரம், மருத்துவத்துறை சேவைக்காக கோபாலகிருஷ்ணன் வேலுசாமி ஆகியோருக்கும் பத்ம விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

மறைந்த பங்குச்சந்தை வர்த்தகர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, நடிகை ரவீணா டண்டன் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.