கேப்டன் மில்லர் படப்பிடிப்பு : வனவிலங்குகள், சுற்றுச்சூழல் பாதிப்பு

வாத்தி படத்தை முடித்த கையோடு அடுத்ததாக தான் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முண்டந்துறை புலிகள் சரணாலயம் பகுதியில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அடர் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடப்பதால், அதற்காக அங்கு கோவில் கோபுரத்துடன் கூடிய கிராமச்சூழல் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் மற்றும் கால்நடை மேய்ப்பாளர்களை கூட அனுமதிக்காத பகுதியில், தற்போது, பெரிய லாரிகளில் தளவாடப்பொருட்களை கொண்டு வந்து இறக்குகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய இடைஞ்சல் ஏற்படுவதாக சில புகார்கள் படக்குழுவினர் மீது எழுந்து உள்ளதாம்.

குறிப்பாக அந்த தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே காட்டில் இருந்து வெளியேறிய யானை ஒன்று இந்த வெளிச்சத்தால் மிரண்டு போய், வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சுற்றி வருவதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அச்சத்தில் இருக்கிறார்களாம்.

அதுமட்டுமல்ல படப்பிடிப்பு தளத்தில் துப்பாக்கி, வெடிகுண்டு பயன்படுத்தப்படுவது போன்ற காட்சிகள் படமாக்கப்படும்போது ஏற்படும் சத்தங்களும் அருகில் உள்ள வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் புகார் சொல்லப்பட்டுள்ளது.

பழைய குற்றாலம், ஒப்பினாங்குளம், செங்குளம் கால்வாய் நீர்வரத்து பகுதிகள் படப்பிடிப்புக்காக சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 15க்கும் மேற்பட்ட குளங்களில் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநதி – ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளர் ராம.உதயசூரியன், புலிகள் காப்பக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். எனினும் படப்பிடிப்பு நிறுத்தப்படாமல் தொடர்கிறது.

இதுபற்றி அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்த படக்குழுவினர் வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துகிறார்களா என தெரியவில்லை.. யாராவது இதுகுறித்து கேட்டால் மேலிடத்திலிருந்து எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது என்று கூறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து வனத்துறைக்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவது தொடர்பான விவரங்களை வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.