தமிழக வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்: அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: இந்த பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது.வேளாண் மானிய கோரிக்கையில் உள்ளதே இதில் இடம் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாகத் தெரியவில்லை.

சட்டப்பேரவை தேர்தலின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகஆட்சிக்கு வந்தவுடன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலை வழங்கப்படும் என்றார். தற்போது டன்னுக்கு ரூ.195 தரப்படும் கூறப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது ரகங்களைப் பிரித்து ரூ.100, ரூ.75 என கூறி யுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்து, ரூ.700 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அரசு அத்திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது கண்டனத்துக்குரியது.

ஆசியாவில் மிகப்பெரிய கால்நடைப்பூங்கா கட்டுமானப் பணிகள்முடிந்துள்ள நிலையில், இதுவரைதிறக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் வேளாண் பெருங்குடி மக்களின்நல்வாழ்வுக்காக எந்த புதிய திட்டமும் இல்லாதது வேதனையளிக் கிறது. இந்த அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுகவின் தேர்தல்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாறு நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500-ஆக உயர்த்துவது, கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்குரூ.4,000-ஆக உயர்த்துவது போன்றஅம்சங்கள் இல்லாதது விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தைஅளித்துள்ளது.

வேளாண்மையைஇயந்திர மயமாக்கும் முயற்சியைமுன்மொழிந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது, வேளாண் தொழிலில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்க முடியாது என்ற நிலைக்கு அரசு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. விவசாயிகளை விரக்தியின் உச்ச நிலைக்கு அழைத்துச் செல்வதாக அறிக்கை அமைந்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500ஆகவும், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.4,000 ஆகவும் உயர்த்துவோம் என்று போலி தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 3-வதுஆண்டிலும் சற்றும் கவலையில்லாமல், விவசாயி நலன் குறித்து எண்ணாமல், இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.2,821, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.195 வழங்கப்படும், விவசாயிகள் சந்தேகங்களைத் தீர்க்க வட்டாரத்துக்கு ஒரு விஞ்ஞானி நியமனம், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ரூ.50 கோடி உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்புக்குரியதாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: கருத்துக் கேட்புக் கூட்டங்களில் வந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அனைத் துத் தரப்பினரும் மகிழ்ந்து வர வேற்கும் நிதிநிலை அறிக்கை வழங்கியமைக்கு பாராட்டுகள். நெல்லுக்கு அறிவித்துள்ள ஊக்கத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி, பாசன முறையை நிறுவ ரூ.450 கோடிமானியம், 10 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை போன்ற திட் டங்கள் வரவேற்கத்தக்கது. சிறு தானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டங்களால் வேளாண்மைத் தொழில் புத்தாக்கம் பெறும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பாமகவின் நிழல் நிதிநிலை அறிக் கையில் முன்மொழியப்பட்ட பல திட்டங்கள் அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப் பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் கரும்பு மற்றும் நெல்லுக்கான கொள்முதல் விலைஉயர்த்தப்படாததும், நெல் கொள் முதல் அளவை அதிகரிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படாததும் பெரும் ஏமாற்றமளிக்கிறது. மேலும், கடலூர் மாவட்டத்தில் என்எல்சி-க்காக நிலம் கையகப்படுத்தப்படாது என்ற அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றத்தை அளிக் கிறது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு வேளாண்கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. இதேபோல் எந்த விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை, நெல்லுக்கான ஊக்கத் தொகை, கூட்டுறவு பயிர் கடனுக்கான நிதி, தூர்வாருதல் பணிக்கான நிதி போன்றவை போதுமானதாக இல்லை.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வேளாண்மை அல்லாத திட்டங்களுக்காக விளை நிலங்களை அரசே கையகப்படுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்று நடவடிக்கை என்ன என்பதை ஏன்சொல்லவில்லை? கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 என்று திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் எத்தனை பட்ஜெட்கள் தாக்கலாவதற்கு விவசாயிகள் காத்திருக்க வேண்டுமோ? இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்கு.செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்டப்பேரவை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தளி ராமச்சந்திரன், சட்டப்பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் நாகை மாலி,மனித நேய மக்கள் கட்சித் தலைவர்எம்.எச்.ஜவாஹிருல்லா, சட்டப்பேரவை விசிக தலைவர் சிந்தனைச்செல்வன், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.