எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா: எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் குற்றவாளிகள் சிலர் இடம்பெற்றுள்ளதாகவும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மம்தா பானர்ஜி அண்மை காலமாக காங்கிரசையும், ராகுல் காந்தியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் பாஸ் அல்ல காங்கிரஸ் கட்சி என்று அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த சூழலில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆளும் மோடி அரசுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து விடுத்துள்ள செய்தியில், பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சியை சார்ந்த தலைவர்கள் முதன்மை இலக்காக குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் குற்றம் சம்பந்தமான வழக்குகள் உடையவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாமல், தொடர்ச்சியாக அமைச்சரவையில் ஈடுபடுத்தப்படுவது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் எதிர்க்கட்சி தலைவர்களின் பேச்சுக்காக அவர்களை தகுதி நீக்கம் செய்வதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் இந்தியாவில் உள்ள அரசியல் சாசன ஜனநாயகம் மிகப்பெரிய தாழ்ச்சியை சந்தித்திருக்கிறது என்றும் ஜனநாயக அரசியலின் தற்போதைய நிலைக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு எனவும் மம்தா சாடியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.