கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிடும் அதிமுக? – பேரவையில் கே.பி.முனுசாமி பேசியது என்ன?

‘அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அடித்துக் கொண்டிருந்தால் தான், நமக்குள் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சியாக இருக்க முடியும்’ என கே.பி. முனுசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.
நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி, தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 56 வாக்குறுதிகளில் விவசாயிகளுக்காக இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால் நிதிநிலை அறிக்கையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதாக கூறினார். தி.மு.க. வாக்குறுதியில் இடம்பெற்ற நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ஆயிரம் ரூபாயும் எப்போது வழங்கப்படும் எனவும் கே.பி. முனுசாமி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்து பேசிய வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ‘பொறுத்தார் பூமியாழ்வார்’ என்பதற்கேற்ப நெல்லுக்கும், கரும்புக்கும் சொன்ன விலை உயர்த்தி வழங்கப்படும் எனவும், அந்த நம்பிக்கை விவசாயிகளுக்கு இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய கே.பி. முனுசாமி, அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு என சொன்னால் வாக்களித்த பெண்கள், தி.மு.க. அரசை நம்புவார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியதை எப்போது செயல்படுத்துவீர்கள் எனவும், கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இருந்த காலக்கட்டத்தில் செயல்படுத்தப்பட்டதாகவும், மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் 150 நாட்களாக உயர்த்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு 100 நாள் வேலை திட்டத்திற்கு 281 ரூபாய் வழங்கப்படுவதாக அமைச்சர் பதில் அளித்தார். விவாதத்தை முடிக்க சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில், ஆவேசமடைந்த கே.பி. முனுசாமி, உணர்ச்சிப்பூர்வமாக பேசிக் கொண்டிருப்பதாகவும், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அடித்துக் கொண்டிருந்தால் தான் நமக்குள் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என சூசகமாக பேசியது அவையில் இருப்பவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கே.பி.முனுசாமி இவ்வாறு பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.