சென்னை: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு; கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் அஸ்வின்

சென்னை

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக விளையாடி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த 2010ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான இவர், இதுவரை 92 டெஸ்ட், 113 ஒருநாள், 65 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடிய 692 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேக 500 விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

36 வயதான அஸ்வின் சுழலில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறந்த வீரராக உள்ளார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் 5 சதங்களை விளாசியுள்ள அவர் 13 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

ஒருநாள் போட்டியிலும் அரைசதம் விளாசி உள்ளார். சமீபத்தில், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவர் 25 விக்கெட் வீழ்த்தி அசத்தி உள்ளார்.

இந்நிலையில், இந்திய வீரர் அஸ்வின் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க உள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் பள்ளியில் இதற்கான பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சிக்காக 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி கொடுக்க முடிவு செய்துள்ளார்.

மாநகராட்சி பள்ளியில் கிரிக்கெட் உள்கட்டமைப்பு வசதியை உருவாக்கும் முயற்சியில் பெருநகர மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது. அதன்படி, இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதே போல மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள் உள்பட 60 பேருக்கு கால்பந்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.