10,117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: அரசுப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10,117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும்போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படைக் கல்வித் தகுதியாகக் கொண்ட இந்த தேர்வில் 18.36 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக குரூப்-4 தேர்வு முடிவுகள் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும். ஆனால், கடந்த ஆண்டுகளைவிட அதிக அளவிலான தேர்வர்கள் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களால் இந்த முறை தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, குரூப்-4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7,301-ல்இருந்து 10,117-ஆக உயர்த்தப்பட்டது. இது தேர்வர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து, குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்தது.

அதன்படி, சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. தேர்வர்கள் தங்கள் முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான தேர்வர்கள் முடிவுகளை அறிய முற்பட்டதால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியது. இதனால் தேர்வர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

கட்-ஆஃப் உயர்வு: குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால், கட்-ஆஃப் உயர்ந்துள்ளது. மொத்த மதிப்பெண் 300-க்கு, 170-க்கு மேல் எடுத்தவர்களே தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.