அதானியின் நிறுவனங்கள் மீது விசாரணை நடத்துவதற்கு பிரதமர் அச்சப்படுவது ஏன்?.. ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: முறைகேடு அம்பலமான பிறகும் மக்களின் பணம் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ‘மோடி’ சமூகத்தினரை பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து, எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தியை மக்களவை செயலகம் தகுதிநீக்கம் செய்து அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று அறப்போராட்டம் நடத்தினர். ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மக்களின் பென்சன் பணம் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்வது ஏன் என்பது குறித்து விசாரணையும் இல்லை. பதிலும் இல்லை. பயம் ஏன்? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; எல்ஐசி மூலதனம், அதானிக்கு, ஸ்டேட் வங்கியின் மூலதனம், அதானிக்கு, இபிஎப்ஓ அமைப்பின் மூலதனமும் அதானிக்கு. முறைகேடு அம்பலமான பிறகும் மக்களின் பணம் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவது ஏன்? விசாரணை நடத்துவதற்கு பிரதமர் அச்சப்படுவது ஏன்? என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.