காங்கிரஸ் அல்லாத 3-வது அணி; உருவானால் யாருக்கு லாபம்?! – ஓர் அலசல்

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, 3-வது அணியை உருவாக்குவதற்கான முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டிருக்கிறார். பா.ஜ.க-வையும் காங்கிரஸையும் சமதூரத்தில் வைத்துப் பார்க்கும் கட்சிகளைக் கொண்டு தனியாக ஓர் அணியை உருவாக்குவது மம்தா பானர்ஜியின் நோக்கமாக இருக்கிறது.

நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்., உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஆகிய மூன்று கட்சிகளும் பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கின்றன. அதே நேரம், காங்கிரஸ் கட்சியையும் இந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை காங்கிரஸ் எதிர்ப்பு நிலையில் இருக்கும் கட்சிகள். இந்த இரு கட்சிகளும் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இல்லை என்றாலும், பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் இருப்பதால், பா.ஜ.க-வுடன் மென்மையான போக்கைக் கடைப்பிடித்துவருகின்றன.

மம்தா, அகிலேஷ்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்காலம் இருந்தாலும், அதற்கான பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்டது. அதனால், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி இறங்கியிருக்கிறார்.

இந்த நேரத்தில், ‘3-வது அணியெல்லாம் வேலைக்கு ஆகுமா..‘ என்ற கேள்வியையும் அரசியல் நோக்கர்கள் முன்வைக்கிறார்கள். முதன் முறையாக, 1989-ம் ஆண்டு, வி.பி.சிங் தலைமையில் 3-வது அணி ஆட்சிக்கு வந்தது. அந்த அரசுக்கு வெளியிலிருந்து பா.ஜ.க ஆதரவளித்தது. விரைவில், பா.ஜ.க தனது ஆதரவை விலக்கிக் கொண்டவுடன், வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு, காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் ஆட்சியமைத்தார். அவரது ஆட்சியும் குறுகிய காலத்திலேயே கவிழ்ந்தது. அதேபோல, ஹெச்.டி.தேவகவுடா தலைமையிலும், ஐ.கே.குஜ்ரால் தலைமையிலும் மூன்றாவது அணிகளின் ஆட்சிகள் அமைந்தன. அந்த ஆட்சிகளும் விரைவிலேயே வீழ்ந்தன. அதன் பிறகு, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மூன்றாவது அணி பற்றிய பேச்சை 2018-ம் ஆண்டு கே.சந்திரசேகர ராவ் தொடங்கினார்.

சந்திரசேகர ராவ்

தற்போது, மம்தா பானர்ஜிதான் மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். சமீபத்தில், கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியைச் சந்தித்தார் அகிலேஷ் யாதவ். அதன் பிறகு, ஒடிசாவுக்குச் சென்று நவீன் பட்நாயக்கைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி. அரவிந்த் கெஜ்ரிவால், கே.சந்திரசேகர ராவ் ஆகியோருடான சந்திப்பு எப்போது நிகழும் என்பது தெரியவில்லை. ஜெகன்மோகன் ரெட்டியைப் பொறுத்தவரையில், மம்தாவின் அணியில் சேருவாரா என்பதும் சந்தேகம்தான்.

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கும், அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் எதிராக மம்தா, சந்திரசேகர ராவ், கெஜ்ரிவால், அகிலேஷ் ஆகியோர் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். அதற்காக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இவர்கள் சேர்ந்துவிடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. மூன்றாவது அணிக்கு வரக்கூடிய கட்சிகளைக் கொண்டு, புதிதாக ஓர் அணி அமைந்தால், அது யாருக்குச் சாதகமாக அமையும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

பா.ஜ.க-வை எதிர்க்கக் கூடிய கட்சிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்தால், அது பா.ஜ.க-வுக்குத்தான் பலம் சேர்க்கும். இப்படியான சூழலில்தான், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து அரசியல் கட்சிகளும் அரசியல் நோக்கர்களும் விவாதித்துவருகிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு கிடைக்கிற எம்.பி-க்களின் எண்ணிக்கையும், மூன்றாவது அணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு கிடைக்கிற எம்.பி-க்களின் எண்ணிக்கையையும் பொறுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அடிப்படையில் புதிய அரசை அமைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். ஆனால், மூன்றாவதாக ஓர் அணி களத்தில் இறங்குவதால், வாக்குகள் பிரிந்து, பா.ஜ.க அதிகமான இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.