காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

பஞ்சபூத ஸ்தலங்களில் மனஸ்தலமாக விளங்கக்கூடிய புகழ் பெற்ற சிவஸ்தானங்கள் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் திரு விழாவானது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பங்குனி உத்திர திருக்கல்யாணம் திருவிழா  கொடியேற்றமானது வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதனைதொடர்ந்து முதல் நாள் இரவு ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும், ஏலவார்குழலி கிளி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

அதன்பின் தீபாராதனை காட்டப்பட்டு, ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும்,ஏலவார்குழலி கிளி வாகனத்திலும்  ராஜவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர். அப்போது, சின்னஞ்சிறு பிள்ளைகளும்,பிஞ்சு குழந்தைகளுமே சிவ மேளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டனர். அதேபோல், நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்த ஏகாம்பரநாதரையும், ஏலவார் குழலியையும் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து பயபக்தியுடன் வேண்டி சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

இதேபோல் முருகனின் அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட முருகன் தளங்களிலும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.