அண்ணாமலை பல்கலை. தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மறுத்தது தவறு: சீமான்

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதியப் பணியாளர்கள் 205 பேரையும் தமிழக அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதியப் பணியாளர்கள் தங்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரிப் போராடி வரும் நிலையில், அவர்களில் முத்துலிங்கம் எனும் பணியாளர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள செய்தி பெரும் மனவேதனையைத் தருகிறது. வாழ்வதற்கான பொருளாதாரக் கையிருப்புக்காக நிரந்தர வேலைகேட்டுப் போராடியப் பணியாளரை, தன்னுயிரைத் தானே மாய்த்து செத்து மடிகிற விரக்தி மனநிலைக்குத் தள்ளிய ஆளும் வர்க்கத்தின் கொடுங்கோல் செயல்பாடு வெட்கக்கேடானது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13 ஆண்டுகளாகப் பணிசெய்து வரும் தொகுப்பூதியப் பணியாளர்கள் 205 பேருக்கும் 7,000 ரூபாய்வரை மட்டுமே தற்போது ஊதியம் கொடுக்கப்பட்டு வருகிறது. தொகுப்பூதியத்தில் பணியில் சேருவோர் வழமையாக இரு ஆண்டுகளிலேயே பணிநிரந்தரம் பெற்று விடும் நிலையில், 13 ஆண்டுகளைக் கடந்தும் பணிநிரந்தரம் செய்ய மறுத்து வரும் ஆளும் வர்க்கத்தின் நிர்வாக முடிவு மிகத்தவறானது. தங்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரி, எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பல்வேறு வடிவங்களில் பலகட்டப்போராட்டங்களை முன்னெடுத்தும், எந்தவிதத் தீர்வும் கிடைக்காத நிலையிலேயே பணியாளர் முத்துலிங்கம் இத்தகைய முடிவை எடுத்துள்ளார்.

எதுவொன்றிற்கும் மரணம் ஒரு தீர்வாகாது. ஆகவே, இதுபோன்ற தவறான முடிவை எந்தவொருப் பணியாளரும் எடுக்கக்கூடாதென உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தங்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரி தொகுப்பூதியப் பணியாளர்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்கள் யாவற்றையும் முழுமையாக ஆதரித்து, போராட்டக் கோரிக்கைகள் வெல்ல இறுதிவரை நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என இச்சமயத்தில் உறுதியளிக்கிறேன்.

இத்தோடு, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பணியாளர் முத்துலிங்கம் முழுமையாக மீண்டுவர உரிய மருத்துவச்சிகிச்சைகளை ஏற்பாடு செய்துதர வேண்டுமெனவும், தொகுப்பூதியப் பணியாளர்கள் 205 பேரையும் உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.