“10 மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் மூன்றில் ஒருவர்” – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 27 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளதாகவும், பத்து மாநிலங்களில் மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் உயர்ந்திருக்கிறதா? அப்படியானால் அதைக் குறைக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் அளித்த பதில்: வீட்டு உபயோகப் பொருட்களை நுகரும் சக்தியை அடிப்படையாக வைத்து மத்திய புள்ளியியல் துறையின் கீழ் வரும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் ஒரு கணக்கெடுப்பை நடத்துகிறது. அந்தத் தரவுகளின் அடிப்படையில் திட்டக் கமிஷன் (தற்போது நிதி ஆயோக்) வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தது.

கடைசியாக 2011-12 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பெறப்பட்ட தரவுகளை, டெண்டுல்கர் கமிட்டியின் முறைப்படி கணக்கிட்டு இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் விபரங்களை கடந்த 2013-ம் ஆண்டு வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் 2011-12 காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை கிராமப் புறங்களில் 21.5 கோடி பேரும்; நகர்ப்புறங்களில் 5.5 கோடி பேரும் என மொத்தம் 27 கோடி என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2011-12 காலகட்டத்தில் கிராமப் புறங்களில் 59.2 லட்சம் பேர்; நகர்ப்புறங்களில் 23.4 லட்சம் பேர் என மொத்தம் 82.6 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

அசாம், அருணாச்சல பிரதேசம் பிகார், மணிப்பூர், சத்தீஷ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிஷா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள். கோவா, சிக்கிம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவிகிதம் மற்றும் அதற்கும் குறைவான நபர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

மத்திய அரசைப் பொறுத்தவரை, ‘அனைவருடன் சேர்ந்து; அனைவருக்குமான வளர்ச்சி’என்ற முழக்கத்தின் அடிப்படையில் இந்த வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மனதில் கொண்டே திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசும் அதன் கீழ் உள்ள பல்வேறு துறைகளும் நாட்டில் ஏழ்மையை ஒழிக்க பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், திறன் இந்தியா, கரீப் கல்யாண் அன்ன யோஜனா, தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கான பிரதம மந்திரியின் திட்டம் என பல்வேறு திட்டங்கள் இந்த அடிப்படையில் உருவானவையே. இவற்றை முழுமையாக, சரியாக அமல்படுத்துவதன் மூலம் நம் நாட்டில் ஏழ்மையை மேலும் குறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது என்று அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் பதிலளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.