அதிகரிக்கும் வெயில், பாதிக்கப்படும் உடல்நலன்; வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

கோடைகாலம் தொடங்கி, வெயில் வாட்டத் தொடங்கி விட்டது. எதிர்வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலால் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. கோடையில் ஏற்படும் வெப்ப அலையில் இருந்து மக்கள் தங்களை எப்படித் தற்காத்து கொள்ளலாம்? இது குறித்து, மருத்துவர் சரவண பாரதியிடம் கேட்டோம்…

மருத்துவர் சரவண பாரதி.

என்னென்ன பாதிப்புகள்?

“சுற்றுச்சூழல் தட்பவெப்பநிலையானது குறைந்தது 40 டிகிரி செல்சியஸை எட்டும்போது, அதை Heat waves எனக் கூறுவோம். இந்தியாவில் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி, ஜூன் மாதம் வரை இந்த வெப்ப அலைகளை உணரலாம். சில சமயத்தில், ஜூலை வரை கூட இது நீடிக்க வாய்ப்புள்ளது. ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஐந்து, ஆறு வெப்ப அலைகளை இந்தியாவில் பார்க்க முடியும்.

வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும்போது, நம் உடல் அந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் உடலின் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ள முயலும். வெளிப்புறத்தில் உள்ள வெப்பம் மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் இந்தச் செயல் கடினமானதாக மாறும். இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். தசைவலி, அதீத அசதி, மயக்கம், வலிப்பு, தலைவலி, வாய் குழறுதல், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி என பல்வேறு விதமான பாதிப்புகளை இந்த அதிக வெப்பம் ஏற்படுத்தலாம். சில சமயம் மரணம்கூட நிகழலாம்.

வெப்ப அலையும் முதலுதவியும்!

இதைத் தடுப்பதற்கு உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். யாராவது வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டால் அதற்கான முதலுதவி முறைகள் உள்ளன.

* பாதிக்கப்பட்டவரை, வெயிலில் இருந்து நிழலான ஒரு பகுதிக்கு கொண்டு வர வேண்டும்.

* அவரின் ஆடைகள் இறுக்கமாக இருந்தால் தளர்வாக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரை படுக்க வைத்து, கால்களை சற்று உயர்வாக வைக்க வேண்டும்.

* நல்ல காற்றோட்டம் அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய‌ வேண்டும்.

* ஸ்பான்ஜை பயன்படுத்தி உடலில் நீரால் ஒற்றடம் கொடுக்கலாம்.

கோடை காலத்தில் குழந்தைகள் விஷயத்தில் முக்கிய கவனம் தேவை. வெயில் அதிகமாக அடிக்கும்‌ போது அவர்களை வெளியே விளையாட அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்” என்று மருத்துவர் சரவண பாரதி தெரிவித்தார்.

அம்மை

அச்சுறுத்தும் அம்மை!

கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்கள் பற்றி சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.. “கோடை காலத்தில் பொதுவாக அம்மை, மஞ்சள்காமாலை போன்ற வைரஸால் ஏற்படும் நோய்கள் அதிகம்‌ பரவும். குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் வற்றுவதால் நீர் மாசுபாடு கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். இதனால் நீர் மூலம் பரவும் டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படலாம். இது தவிர சிறுநீரக கற்கள் ஏற்படலாம். ஆனால் இந்தக் கற்கள் உருவாகி அவற்றின் தாக்கம் கோடை முடிந்து ஜூலை மாதத்தில்தான் தெரியத் தொடங்கும்.

கோடையில் வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்ற சரும பாதிப்புகளும் உண்டாகும். ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதால் உடலில் உப்புச்சத்து குறைந்து அதனால் பாதிப்பு வரலாம். இது தவிர, முக்கியமாக அதீத வெயிலில் நேரடியாக செல்லும்போது உடலில் உள்ள நீர்ச்சத்து, உப்புச்சத்து ஆகியவை வெகுவாகக் குறைந்து மூர்ச்சை (Sunstroke) ஏற்படக்கூட வாய்ப்புள்ளது‌.

உடல் சூட்டை குறைக்கும் பழச்சாறு, இளநீர்

வெயிலின் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள, சில வாழ்வியல் நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். முந்தைய காலங்களில் வெளியே சென்றால் தலைப்பாகை அணியும் வழக்கம் இருந்தது. இது வெயில் நேரடியாக உச்சந்தலையில் படாமல் இருப்பதற்காக செய்யப்பட்ட நடைமுறை. எனவே நாமும் வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது நேரடியாக தலையில் வெயில் படுவதைத் தவிர்க்க, தொப்பி போன்ற எதையாவது அணியலாம்.

மருத்துவர் சிவராமன்

இதுதவிர, அதிகமாக வெயில் அடிக்கும் மதிய நேரங்களில் அவசியமற்று வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் எப்போதும் போதுமான நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஒருநாளைக்கு மூன்று முதல், நான்கு லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம். வீடுகளில் மண்பானை வைத்து அதில் வெட்டிவேர் இட்ட தண்ணீரை வைத்துப் பருகுவது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். இயற்கையான பழச்சாறுகள், பதநீர், இளநீர் ஆகியவற்றைப் பருகலாம்.

ஆனால், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இளநீர் மற்றும் பதநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். அவற்றில் இருக்கும் பொட்டாசியம் சத்து, சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு பிரச்னையை உண்டாக்கும். தாகத்தைத் தணிப்பதற்கு என ஏரியேட்டடு பானங்கள் (Aerated drinks) பருகுவதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளரிக்காய், சுரைக்காய், வெள்ளை பூசணி போன்ற அதிக நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

நீராகாரம்

இந்தக் காய்கறிகள், வயிற்றில் உள்ள புண்களையும் குணப்படுத்தும். உண்ணும் உணவில் அதிக காரம் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது, கோடை காலத்தில் ஏற்பட கூடிய செரிமானக் கோளாறுகளைக் குறைக்கும். இரவு உணவை கொஞ்சம் விரைவாக உட்கொள்வதும் கோடை காலத்தில் சிறந்தது. கோடைக்கு நீராகாரம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

முந்தைய நாள் தண்ணீர் ஊற்றி வைத்த சோற்றில், காலையில் நிறைய மோர் சேர்த்துப் பருகலாம். உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு மிகச் சிறந்த புரோபயாடிக் ஆகவும் இந்த உணவு உதவும்” என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.