இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை

மலையாள திரையுலகில் 45 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த நடிகர் இன்னொசென்ட் சமீபத்தில் காலமானார். மலையாள திரையுலகினர் இன்னும் அந்த துக்கத்திலும் அதிர்ச்சியிலும் இருந்து மீளவில்லை. காரணம் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் முதல் தற்போது இருக்கும் இளம் நடிகர்கள் வரை அவருடன் ஏதாவது ஒரு படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றவர்கள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நீண்ட காலமாக மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இன்னொசென்ட் பொறுப்பு வகித்தார். இந்த நிலையில் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர் இன்னொசென்ட் குறித்து தனது நெகிழ்வான தருணங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடிகர் இன்னொசென்ட் எப்போது பேசினாலும் கலகலப்பு குறையாமல் பேசுபவர். நான் எங்காவது ஒரு பொது இடத்தில் இருந்தால் கூட அவரது தொலைபேசி அழைப்பு வந்தால் சற்று தள்ளி தனியாக சென்று தான் பேசுவேன். அந்த அளவிற்கு அவர் பேசுவதை கேட்கும்போதே எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வரும். அப்படி அனைவரையும் சிரிக்க வைத்தவர் இன்னொசென்ட். அவருடைய கடைசி நாட்களில் நேரிலேயே அவர் வீட்டிற்கு சென்று பார்த்து வந்தேன். அப்போது கணிசமான அளவு ஞாபக மறதியின் பாதிப்புக்கும் ஆளாகி இருந்தார் இன்னொசென்ட்.

என்னிடம் ஒரு கதை சொல்வதாக கூறி சொல்லிக் கொண்டே வருவார். ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு வேறு விஷயங்களை பேச ஆரம்பித்து விடுவார். பின்னர் அதே கதையை, என்னிடம் சொன்னதையே மறந்துவிட்டு மீண்டும் சொல்ல ஆரம்பிப்பார். முதலில் எங்கே நிறுத்தினாரோ அதே இடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் வேறு விஷயங்களுக்கு தாவி விடுவார். அப்போதே அவர் கிட்டத்தட்ட ஞாபக மறதி பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது

அதே சமயம் நான் சமீபத்தில் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றதை அவரிடம் கூறினேன். அப்போது சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் இணைந்து நடித்த என்னும் எப்பொழும் படத்தில் இருவரும் பைக் ஓட்டிக்கொண்டு சென்ற அந்த காட்சிகளை ஞாபகப்படுத்தி என்னை கலாட்டா செய்தார். அதுமட்டுமல்ல நான் விடைபெற்று கிளம்பும்போது, பைக் ஓட்டும் போது பார்த்து கவனமாக ஓட்டு என்றும் கூறினார். அதுதான் அவர் என்னிடம் கடைசியாக பேசிய வார்த்தை” என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார் மஞ்சு வாரியர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.