கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்… சரிந்த பாஜக- கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. வழக்கம் போல்
காங்கிரஸ்
, பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி

அதில், காங்கிரஸ் கட்சி மூன்று இலக்க எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். அந்த வகையில் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமரும். பாஜக இரண்டு இலக்க எண்ணிக்கை பெரும் சறுக்கலை சந்திக்கும்.

ஓல்டு மைசூரு

மதச்சார்பற்ற ஜனதா தளம் வழக்கம் போல் ஓல்டு மைசூரு மண்டலத்தில் கொடி நாட்டும். ஆனால் கிங் மேக்கராக வாய்ப்புகள் குறைவு எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக பார்க்கும் போது ஓல்டு மைசூருவில் காங்கிரஸ் 24-28, பாஜக 1-5, மதச்சார்பற்ற ஜனதா தளம் 26-27, மற்றவை 0-1 என வெற்றி பெறும். மத்திய கர்நாடகாவில் காங்கிரஸ் 18-22, பாஜக 12-16, மதச்சார்பற்ற ஜனதா தளம் 1-2, மற்றவை 0-1 என வெற்றி பெறக்கூடும்.

கடலோர கர்நாடகா

கடலோர கர்நாடகாவில் காங்கிரஸ் 8-12, பாஜக 9-13, மதச்சார்பற்ற ஜனதா தளம் 0-1, மற்றவை 0-1 என வெற்றி வாய்ப்புள்ளது. மும்பை – கர்நாடகா மண்டலத்தில் காங்கிரஸ் 25-29, பாஜக 21-25, மதச்சார்பற்ற ஜனதா தலம் 0-1, மற்றவை 0-1 என வெற்றி பெறும். ஹைதராபாத் மண்டலத்தில் காங்கிரஸ் 19-23, பாஜக 8-12, மதச்சார்பற்ற ஜனதா தளம் 0-1, மற்றவை 0-1 என வெற்றி பெற வாய்ப்புள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் 115-127 இடங்களிலும், பாஜக 68-80 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 23-35 இடங்களிலும், மற்றவை 0-2 இடங்களிலும் வெல்லும். தற்போதைய பாஜக ஆட்சியின் செயல்பாடுகள் பற்றிய கேள்விக்கு 27.7 சதவீதம் பேர் சிறப்பு எனவும், 21.8 சதவீதம் பேர் பரவாயில்லை எனவும், 50.5 சதவீதம் பேர் மோசம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

யார் அடுத்த முதல்வர்?

யார் முதல்வராக வர வேண்டும் என்ற கேள்விக்கு காங்கிரஸின் சித்தராமையாவிற்கு 39.1 சதவீதம் பேரும், பாஜகவின் பசவராஜ் பொம்மைக்கு 31.1 சதவீதம் பேரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு 21.4 சதவீதம் பேரும், காங்கிரஸின் டிகே சிவக்குமாருக்கு 3.2 சதவீதம் பேரும், பாஜகவின் நளின் குமார் காட்டீல் 1.6 சதவீதம் பேரும், பாஜகவின் சதானந்தா கவுடாவிற்கு 1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகள்

இந்த தேர்தலில் எந்தெந்த விஷயங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு லிங்காயத்து & ஹிஜாப் சர்ச்சை 30.8 சதவீதம் பேரும், மத வாரியாக வாக்குகள் பிளவுபடுவது 24.6 சதவீதம் பேரும்,

காவிரி நீர் பிரச்சினை 14.6 சதவீதம் பேரும், சமீபத்திய தொடர் கொலைகள் 6.1 சதவீதம் பேரும், தற்போதைய மாநில அரசின் செயல்பாடுகள் 13.3 சதவீதம் பேரும், தேசியமும் & அடையாள அரசியலும் 6.8 சதவீதம் பேரும், ஆம் ஆத்மி போட்டியிடுவது 3.5 சதவீதம் பேரும் என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.