வேணுகோபால சுவாமி கோயிலில் பயங்கர தீ; ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தில் அதிர்ச்சி!

நாடு முழுவதும் இன்று ராம நவமி தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ராமர் அவதரித்த நாளை இவ்வாறு கொண்டாடுகின்றனர். மகா விஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங்களில் மிக மிக முக்கியமானது ராமர் அவதாரம். ராமரின் அருளை பெறுவதற்கு இந்த நாள் மிகவும் உகந்தது எனச் சொல்லப்படுகிறது.

வேணுகோபால சுவாமி கோயில்

இந்நிலையில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனுகா மந்தலில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேணுகோபால சுவாமி கோயிலில் ராம நவமியை ஒட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11.41 மணி முதல் பிற்பகல் 1.47 வரை பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம நவமி கொண்டாட்டம்

இந்நிலையில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வேணுகோபால சுவாமி கோயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை மூட்டமாக காட்சி அளித்தது. உடனடியாக பக்தர்களை வெளியேற்றி தீயை அணைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் தீ மளமளவென பரவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை அணைக்கும் முயற்சி

இதனால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவலறிந்து உள்ளூர் போலீசார் உரிய ஏற்பாடுகளை முடுக்கி விட்டனர். இந்த தீவிபத்தில் இதுவரை எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேத விவரங்கள்

அதுமட்டுமின்றி கோயிலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தால் கோயிலுக்குள் யாராவது சிக்கியுள்ளார்களா என்பதை கண்டறிய தீவிரம் காட்டி வருகின்றனர். ராம நவமி நாளில் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்திருந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் மற்றொரு விபத்து

இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ ஜூலேலால் கோயிலில் திடீரென மேற்கூரை பெயர்ந்து வந்தது. இதில் 25க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பக்தர்கள் அலறி அடித்து கொண்டு ஓடியதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பக்தர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் அறிவுறுத்தல்

மாவட்ட நிர்வாகம் சார்பில் விரைவாக பக்தர்களை மீட்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இதுபற்றி தகவலறிந்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உடனே இந்தூர் ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை தொடர்பு கொண்டு பேசினார். கோயிலில் சிக்கியுள்ள நபர்களை மீட்க விரைவாக செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் 8 பேர் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.