2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி அப்பீல் செய்ய முடிவு: சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடகா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி சமூகத்தினரை அவமதித்ததாக சூரத்தில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்தியின் தண்டனை காலம் 1 மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.  

இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி கொறடா மாணிக்கம் தாகூர் கூறுகையில், ‘‘நடப்பு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்கக் கூடாது என்று மத்திய அரசு திட்டமிட்டு சதி செய்து அவரை வேண்டுமென்றே தகுதி நீக்கம் செய்துள்ளது. இது முற்றிலும் பொய்யான வழக்கு. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம்” என்றார். இந்த நிலையில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து ராகுல் காந்தி, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்பேரில் சூரத் கோர்ட்  தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட உள்ள அப்பீல் மனு காங்கிரஸ் கட்சியின் முக்கிய சட்ட ஆலோசகர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது. சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதன்மூலம் எம்.பி. பதவியை மீண்டும் பெற ராகுல் காந்தி முடிவு செய்து உள்ளார்.

லட்சத்தீவு எம்பி முகமது பைல் பதவியும் இதேபோல ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் ஐகோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியதால், அவரது எம்பி பதவி ரத்து செய்யப்பட்ட உத்தரவு நீக்கப்பட்டது. அதேபோல ராகுல்காந்தியின் தண்டனையும் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை கணக்கில் கொள்ளாமல், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது குறித்து தனியாக வழக்குத் தொடரலாமா அல்லது 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து வழக்குத் தொடரலாமா என்பது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் ஓரிரு நாளில் இது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், இந்தக் கூட்டத் தொடரில் ராகுல்காந்தி கலந்து கொள்ள வாய்ப்பு உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனாலும் ராகுல்காந்தியின் அப்பீல் குறித்து அரசியல் அரங்கிலும் எதிர்பார்ப்புடன் கூடிய பரபரப்பு நிலவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.