Madras HC: ஜெயலலிதாவின் ஒன்றுவிட்ட அண்ணனுக்கும் சொத்தில் பங்கு? வழக்கை விசாரிக்கலாம்

சென்னை: ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, அவரது சகோதரர் எனக் கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை, விசாரணைக்கு ஏற்று சென்னை உயர்நீதிமன்ற  மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து வாரிசுரிமை சட்டப்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் என்.ஜி.வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தனது தந்தை ஜெயராமனின் இரண்டாவது மனைவியின் மகளான ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு 50 சதவீதம் பங்கு தர தீபா, தீபக்குக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 1950ம் ஆண்டு ஜெயராமனிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் தனது தாய் தாக்கல் செய்த வழக்கில் அப்போதே ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதாவைப் பிரதிவாதிகளாக சேர்த்ததை சுட்டி காட்டி உள்ளார்.

இந்து வாரிசுரிமை சட்டப்படி தனக்கும் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு உள்ளது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை கடந்த 2021ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது, அதில் சில பிழைகள் இருந்ததன் காரணமாக மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் காலதாமதமாக தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.  

காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 

காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்,  அதை  விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி ஜெ.தீபா, ஜெ,தீபக் ஆகியோருக்கு மாஸ்டர் நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்களை அனுபவித்துவரும்  இருவரும் பதில் மனு தாக்கல் செய்யாததால், ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வாசுதேவன் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.