அதிமுக கூட்டணி சரி.. யார் பக்கம்? அமித் ஷா தெளிவா சொல்லணும்ல.. குட்டையைக் குழப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்!

சென்னை : “அமித்ஷா சொல்கிற அதிமுக கூட்டணி எடப்பாடி பழனிசாமியின் டெண்டர் அதிமுகவா? இல்லை ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர் அதிமுகவா? என்பதை தெளிவு படுத்தி விட்டால் சிறப்பாக இருக்கும்” என ஓபிஎஸ் அணியின் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பாஜக – அதிமுக கூட்டணி இடையே சலசலப்புகள் நிலவி வந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அறிவித்திருக்கிறார்.

பதிலுக்கு எடப்பாடி பழனிசாமியும் இனிவரும் காலங்களிலும் பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

அமித்ஷா உறுதி

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பாஜக – அதிமுக உறவில் விரிசல் என கூறப்பட்ட நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சியில் பேசும்போது அமித்ஷா அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக இருக்கிறது என உறுதிபடச் சொன்னார். தமிழ்நாட்டில் பாஜக கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. அதை மேம்படுத்த உழைத்து வருகிறோம். தொலைதூர கிராமங்களையும், வாக்குச்சாவடிகளையும் பாஜக எட்டியுள்ளது. நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடங்களில் கூட்டணி கட்சிகள் கை கொடுக்கும். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம் என்று அமித்ஷா குறிப்பிட்டார். பாஜகவின் அதிகார மையமாக இருக்கும் அமித் ஷா அதிமுகவுடன் தான் கூட்டணி என உறுதி செய்திருப்பது அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டுள்ளது.

மதில் மேல் பூனை

மதில் மேல் பூனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் பாஜக உடன் எடப்பாடி பழனிசாமி நெருக்கம் காட்டவில்லை. பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று ஒரே ஓர் இடத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். அதேசமயம், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்த நிலையில், அண்ணாமலை டென்ஷன் ஆனார். தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் சென்னையில் நடந்தபோது பேசிய அண்ணாமலை, தேசியத் தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிவிடுவேன். அதிமுக நம்மைவிட்டு விலக வேண்டும் என்று தொடர்ந்து செயலாற்றிவரும் நிலையில், நாம் ஏன் அவர்களுக்கு அடிபணிந்து போக வேண்டும் என ஆவேசமாகப் பேசியிருந்தார்.

தேசிய தலைமை

தேசிய தலைமை

இது பாஜக – அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை என அண்ணாமலை பேசியிருந்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். அண்ணாமலை டெல்லி சென்று அமித் ஷா, ஜேபி நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேசிய நிலையில், அமித்ஷா இவ்வாறு பேசியிருப்பது, பாஜகவின் தேசிய தலைமை அதிமுக கூட்டணி என்பதை உறுதி செய்திருப்பதாகவே படுகிறது.

எடப்பாடியும் கன்ஃபார்ம்

எடப்பாடியும் கன்ஃபார்ம்

பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம் குறித்த கேள்விக்கு நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பாஜக – அதிமுக என இரு தரப்பினருமே இந்த கூட்டணி விஷயத்தில் பட்டும் படாமலுமே பேசி வந்த நிலையில், அமித்ஷாவை தொடர்ந்து ஈபிஎஸ்ஸும் உறுதிபடத் தெரிவித்ததால் இரு கட்சிகள் இடையே இணக்கம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எந்த அணி?

எந்த அணி?

இந்நிலையில், ஓபிஎஸ் அணி, எந்த அதிமுகவுடன் கூட்டணி என அமித்ஷா தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ், “அமித்ஷா சொல்கிற அதிமுக கூட்டணி அபகரிப்பு பழனிசாமியின் டெண்டர் அண்ணா திமுகவா? இல்லை எங்கள் ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர் அண்ணா திமுகவா? என்பதை தெளிவுபடுத்தி விட்டால் சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.