ஆஸ்கர் ஆவண படம் புகழ் பொம்மன் – பெள்ளி தம்பதியினர் பராமரித்து வந்த 4 மாத குட்டி யானை உயிரிழந்தது: சோகத்தில் தெப்பக்காடு

தருமபுரி: தமுதுமலையைச் சேர்ந்த பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு, பராமரிப்பிற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 4 மாத குட்டி யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தருமபுரியில் தாயை பிரிந்த இந்த குட்டி யானை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கோடுபட்டி அருகே காட்டிலிருந்து தாயைப் பிரிந்து அந்தப் பகுதியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறுதலாக விழுந்தது. இதனையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த வனத்துறை குழுவினர் யானைக் குட்டியை கயிறுகட்டி மேலே தூக்கி காப்பாற்றினர். அந்த யானைக் குட்டியை ஆஸ்கர் விருது கிடைத்த தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த யானைப் பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளியிடம் கொடுத்து வளர்க்கலாம் என வனத்துறை முடிவு செய்தது. அதற்காக யானை குட்டியானது பின்பு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு நிலையம் முகாமிற்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

யானை குட்டியை பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்த நிலையில், தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் தெப்பக்காடு முகாமில் அதிகாலை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வாமை மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக குட்டி யானை உயிரிழந்ததாக வனத்துறை மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.