நாளை மறுதினம் முதல் ஊதிய உயர்வு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக்கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

ஊதிய உயர்வு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழ்நாட்டில் ஒரு நாள் கூலித் தொகை ரூ.281-ல் இருந்து ரூ 294 ஆக உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு உயர்த்தி வழங்கிய சம்பளம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதலே அமலுக்கு வரும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,000-லிருந்து ரூ.5,000ஆக உயர்த்தி வழங்க ரூ.112 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும். தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவு செய்யப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஊரகப் பகுதிகளில் ரத்த சோகையை குறைக்கும் பொருட்டு 27 லட்சம் முருங்கைக் கன்றுகள் வழங்கப்படும். 10.50 லட்சம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.137 கோடியில் 27 லட்சம் முருங்கைக் கன்றுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊரகப் பகுதிகளில் ரூ. 1,000 கோடியில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ரூ. 1,500 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். சாலைகள், கால்வாய்கள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள் போன்றவை ஏற்படுத்தித் தரப்படும். ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் ரூ.70 கோடியில் கட்டப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் புதிய சத்துணவுக் கூடங்கள் அமைக்கப்படுகிறது. மலைப் பகுதியில் உள்ள ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளை மேம்படுத்த ரூ.30 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். சுற்றுச்சூழல் மாசுகளை குறைக்கும் வகையில் 1,500 கி.மீ. ஊரகச் சாலைகள் அமைக்க 500 மெ.டன் நெகிழி கழிவுகள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.