நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு சுங்கவரியில் பங்கு – மத்திய அரசின் புதிய திட்டம்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகளுக்கு நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு அதில் வசூலிக்கப்படும் சுங்கவரிகளில் பங்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இந்த புதிய திட்டம் விரைவில் அமலாகிறது.

நாடு முழுவதிலும் நகரப் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க ‘பைபாஸ்’ என்றழைக்கப்படும் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் இவை அமைக்கப்படுகின்றன. இந்த சுங்கச்சாவடிகளை அமைக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்களுக்கு அதில் சுங்கவரி வசூல் செய்ய உரிமை அளிக்கப்படுகிறது. இதற்கான நிலங்கள், விவசாயிகள் மற்றும் இதர பொதுமக்களிடம் இருந்து அரசால் கையகப்படுத்தப்படுகிறது.

இதற்காக அரசு நிர்ணயிக்கும் விலை மட்டுமே நிலம் அளித்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தமுறையில், மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, புறவழிச்சாலைகள் அமைக்க நிலம் அளிப்பவர்களுக்கு அதற்காக அரசு நிர்ணயித்த விலையுடன் அங்கு அமைக்கப்படும் சுங்கவரியிலும் ஒரு குறிப்பிட்ட பங்கு அளிக்கப்பட உள்ளது. இந்த அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியால் இந்த புதிய யோசனை விவசாயிகள் நலனுக்காக முன் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அப் புறவழிச் சாலையை சுற்றி அமைக்கப்படும் குடியிருப்புகள் மட்டும் வணிக ரீதியிலான கட்டிடங்களிலும் பங்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இந்து தமிழ் திசை இணையத்திடம் மத்திய தரை வழிப்போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ”இதற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பொதுப் பணித் துறையுடன்(பிடபுள்யுடி) எங்கள் அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது. பிறகு இத்திட்டம் சோதனை அடிப்படையில் ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் அமலாக்கப்பட உள்ளது. இதன்பிறகு உத்தரப்பிரதேச புறவழிச்சாலைகளில் அன்றாடம் 20,000 வாகனங்கள் கடக்கும் சுங்கச்சாவடிகளிலும் இந்தமுறை படிப்படியாக அமலாக உள்ளது.” எனத் தெரிவித்தனர்.

தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளின் புறவழிச்சாலைகள் அமைக்க 30 முதல் 45 மீட்டர் வரை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இனி புதிய திட்டத்தில் இந்த அளவு 50 மீட்டர் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல் 60 மீட்டர் அகலத்தில் அமைந்த சாலைகளை, ‘சூப்பர் ஸ்டேட் ஹைவேஸ்’ எனவும் அழைக்கப்பட உள்ளன. இதுபோன்ற சூப்பர் ஸ்டேட் ஹைவேஸ் அமைக்க பிடபுள்யுடி சார்பில் இடங்கள் அடையாளம் காணும் பணி துவங்கிவிட்டதாகத் தெரிகிறது.

இதுபோல், தேசிய நெடுஞ்சாலைகளுக்காகத் தங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால், விவசாயிகள் நலிவடையும் வாய்ப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. இதன் மீதும், ஒவ்வொரு விவசாயப் போராட்டங்களிலும் முக்கிய கோரிக்கைகள் எழுவது வாடிக்கையாக உள்ளது. இப்பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை சார்பில் இந்த சுங்கவரியில் பங்கு பெறும் முறை திட்டமிடப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஓரளவு பலன் கிடைக்கும் என மத்திய அரசு கருதுகிறது. இந்த புறவழிச்சாலைகளின் சுங்கச்சாவடிகளின் புதிய சுங்கவரி முறை சுமார் 20 வருடங்கள் வரை நீட்டிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த திட்டம் விவசாயிகளுக்கு மட்டும் அன்றி நெடுஞ்சாலைகளுக்கு நிலம் அளிக்கும் இதர பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் அமைவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.