மே.வங்காளம், பீகார் வன்முறை: பிரதமர் மோடி ஏன் அமைதியாக உள்ளார்? – கபில் சிபல் கேள்வி

டெல்லி,

வடமாநிலங்களில் இந்து மத பண்டிகையான ராம நவமி கடந்த 30-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பீகார், மேற்குவங்காளம் மாநிலங்களில் ராம நவமி பண்டிகையின் போது சிலர் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, ஒரு சில பகுதிகளில் மத ரீதியிலான வன்முறை வெடித்தது. இந்து – இஸ்லாமிய மதத்தினர் இடையே இந்த மோதல் வெடித்தது. மேற்குவங்காளத்தின் கவுரா மாவட்டம் ஷிப்பூர், காசிபரா பகுதிகளிலும், பீகாரின் சசாராம், பீகார் ஷெரிப் பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இரு தரப்பும் மாறி மாறி கற்கலை வீசி தாக்குதல் நடத்தியதால் வன்முறை கலமாக மாறியது.

வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், பீகாரின் சசாராம் பகுதிக்கு துணை ராணுவப்படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இந்த வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா பீகார் கவர்னருடன் கள நிலைமையை கேட்டறிந்தார். மத ரீதியிலான மோதலால் பீகார், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்காளம், பீகார் வன்முறை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டுமென்று கபில் சிபல் எம்.பி. தெரிவித்துள்ளார். காங்கிரசில் இருந்து விலகி சமாஜ்வாதி ஆதரவுடன் சுயேட்சை எம்.பி.யாக உள்ள கபில் சிபல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்குவங்காளம், பீகாரை எரிப்பதையும், வெறுப்பு விதைகளை தூவுவதையும் நாட்டு மக்கள் நிறுத்த வேண்டும். இவை அனைத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சித்தாந்தகளுக்கு மட்டுமே பலன் அளிக்கும். சாதாரண மனிதன் இந்த வெறுப்பிற்கு பாதிக்கப்படுகிறான்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும், உள்துறை மந்திரி அமித்ஷா பேசவேண்டும். இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இந்த வன்முறைக்கு மத்தியில் இருவரில் ஒருவர் கூட பேசவில்லை என்பது துரதிஷ்டவசமானது. அவர்கள் ஏன் அமைதியாக உள்ளனர்? இந்த பைத்தியக்காரதனத்திற்கு காரணமான குறிபிட்ட தரப்பினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வேண்டுகொள் விடுக்கிறேன். தற்போது உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் இருந்து நாடு முன்னேறி செல்ல வேண்டும். இந்த சம்பவம் 2024-க்கான (நாடாளுமன்ற தேர்தல்) காரணமாக இருக்க வேண்டாம்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.