மெட்ரோ ரயிலில் நீச்சல் உடையில் வந்த பெண் என் ஆடை; என் உரிமை என விளக்கம்| The woman who came in a bathing suit in the Metro train said, My dress; Explanation as My right

புதுடில்லி, டில்லி, ‘மெட்ரோ’ ரயிலில் நீச்சல் உடை போன்ற தோற்றம் உடைய மிக கவர்ச்சியான உடை அணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்திய பெண், ”ஆடை என்பது என் தனிப்பட்ட சுதந்திரம்; அதைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை,” என, பதில் அளித்துள்ளார்.

புதுடில்லி, ‘மெட்ரோ’ ரயிலில் சமீபத்தில் பயணம் செய்த பெண் ஒருவர், வெளிர் பிங்க் நிறத்தில் நீச்சல் உடையை போல தோற்றம் உடைய மேல் மற்றும் கீழாடை மட்டும் அணிந்திருந்தார். நீச்சல் உடையை விட அவர் அணிந்திருந்த ஆடை படுகவர்ச்சியாக இருந்தது. இதை கண்ட சக பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிலர் அந்த பெண்ணை புகைப்படம் மற்றும், ‘வீடியோ’ எடுத்தனர். அவை சமூகவலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவர்ச்சி உடையால் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் பெயர் ரிதம் சனானா, 19, என தெரியவந்துள்ளது. ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவோ, விளம்பரத்துக்காகவோ நான் இப்படி ஆடை அணிவது இல்லை. பல மாதங்களாகவே இப்படித் தான் ஆடை அணிந்து வெளியே செல்கிறேன். இதுவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. வழக்கமான கேலி, கிண்டல்களை புறந்தள்ளிவிடுவேன்.

இதுபோன்ற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் பழக்கம் ஒரே நாளில் வந்துவிடாது. ‘பேஷன்’ குறித்த நீண்ட நாள் புரிதலுக்கு பின் படிப்படியாக இப்படி உடை அணிய துவங்குகிறோம்.

நான் கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் இருந்து தான் வருகிறேன். நான் நினைத்ததை எல்லாம் செய்ய என் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். என் வாழ்க்கையை நான் விரும்பியபடி வாழ முடிவு செய்தேன்.

நான் என்ன ஆடை அணிய வேண்டும் என தேர்வு செய்வது என் தனிப்பட்ட சுதந்திரம். இது பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை.

ரயிலுக்குள் பயணியர், ‘வீடியோ’ எடுக்க கூடாது என, புதுடில்லி மெட்ரோ சமீபத்தில் உத்தரவிட்டது. அதை மெட்ரோ நிர்வாகமே காற்றில் பறக்கவிட்டுள்ளது. என் ஆடை பிரச்னைக்கு உரியது என்றால், என்னை படம் பிடித்த சக பயணியரின் நடவடிக்கை பிரச்னைக்குரியது இல்லையா?

இவ்வாறு அவர் கூறினார்.

‘மெட்ரோ ரயிலில் பயணிப்போர், சமூக கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். சக பயணியரின் உணர்வுகளை புண்படுத்தும் விதமான உடைகளோ, நடவடிக்கையிலோ ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்’ என, மெட்ரோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.