இந்தியா உதவியுடன் உகாண்டாவில் குடிநீர் திட்ட பணிகள்; நட்பு, நீடித்த வளர்ச்சி ஏற்படும்: பிரதமர் மோடி

புதுடெல்லி,

உகாண்டா நாட்டுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கடந்த 10-ந்தேதி புறப்பட்டு சென்றார். அந்நாட்டில் 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

இதனை முன்னிட்டு, உகாண்டாவில் உள்ள இந்திய விவகாரங்களுக்கான நாடாளுமன்ற அமைப்பில், உறுப்பினர்கள் முன் அவர் உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாட்டுக்கான கட்டமைப்பில் உலகளாவிய தெற்கு பகுதிகளின் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விசயங்களை சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என குறிப்பிட்டார்.

உகாண்டாவும் இதில் பங்கேற்க உள்ளது என கூறிய அவர், சர்வதேச வளர்ச்சி மற்றும் முன்னேற்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு ஜி-20 தலைமைத்துவம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த பயணத்தில் உகாண்டா வெளியுறவு மந்திரியான ஜேஜே ஒடாங்காவை சந்தித்து பேசுகிறார். பிற மந்திரிகளுடனும் சந்திப்பு நடைபெறுகிறது. இதன்பின் இருநாடுகளுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தில் வர்த்தக மற்றும் தொழில்துறை சமூகத்தினர் முன்னிலையில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றுகிறார். தவிர, இந்திய வம்சாவளியினருடனும் அவர் உரையாடுகிறார் என்றும் தெரிவித்தது.

இதன்படி, உகாண்டாவில் செயல்படும் இந்திய எக்சிம் வங்கியால் நிதி வழங்கப்பட்ட, சூரிய சக்தியால் இயங்க கூடிய குடிநீர் வினியோக சாதனங்கள் தொடக்க நிகழ்ச்சியில் மெய்நிகர் காட்சி வழியே அவர் கலந்து கொண்டார்.

இதுபற்றி டுவிட்டரில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட செய்தியில், இந்த திட்டம், 20 கிராமப்புற மாவட்டங்களில் உள்ள 5 லட்சம் உகாண்டா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான குடிநீரை வினியோகிக்க வழிசெய்யும் என தெரிவித்து உள்ளார்.

இதன்பின் உகாண்டாவில் உள்ள இந்திய வர்த்தக சமூகத்தினரை அவர் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுக்கு பங்காற்றியதற்காக அவர்களுக்கு பாராட்டுதலை தெரிவித்து கொண்டதுடன், இருநாட்டு வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களை ஈட்ட கூடிய வர்த்தக உறவுகளை இணைக்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றும்படி அவர்களை ஊக்கப்படுத்தினேன் என்று மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா பரவலின்போதும், உகாண்டாவில் பிரதமர் மோடி உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார். இந்திய மற்றும் ஆப்பிரிக்க மாநாட்டிலும் நாங்கள் பங்கேற்றோம்.

ஆப்பிரிக்காவை சேர்ந்த 50 ஆயிரம் இளைஞர்கள் கல்வி மற்றும் திறன் பயிற்சிகளை பெறும் வகையில் அவர்களுக்கு அவற்றை நாங்கள் வழங்கினோம் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இந்திய விவகாரங்களுக்கான அமைப்பில் பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து வருகிற 13-ந்தேதி (நாளை) முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் மொசாம்பிக் நாட்டில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொசாம்பிக் குடியரசு நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய வெளிவிவகார மந்திரியின் பயணம் இதுவாகும்.

முக்கிய தலைவர்களை சந்தித்து பேசும் அவர், அந்நாட்டு வெளியுறவு மந்திரியான வெரோனிகா மகாமோவுடனான சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில் மொசாம்பிக் நாட்டின் பல்வேறு மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

மொசாம்பிக்கில் உள்ள இந்திய வம்சாவளியினருடனும் அவர் உரையாட உள்ளார். உகாண்டா மற்றும் மொசாம்பிக் நாடுகளில் மேற்கொள்ளும் மந்திரி ஜெய்சங்கரின் பயண திட்டத்தினால், இந்த இரு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உகாண்டா பயணம் பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட தகவலை பிரதமர் மோடி மீண்டும் டுவிட் செய்து உள்ளார். அதன்பின், இந்த திட்ட பணிகளால், உகாண்டாவுடனான இந்தியாவின் நட்பு மேம்படுவது மட்டுமின்றி, நீடித்த வளர்ச்சியும் ஏற்படும் என தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.