பணியின்போது உயிரிழந்த 13 அரசு மருத்துவர்கள் குடும்பத்துக்கு ரூ.8.50 கோடி நிதி: வாரிசுகளிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பணியின்போது உயிரிழந்த 13 அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியில் இருந்து ரூ.8.50 கோடி நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் எதிர்பாராத வகையில் உயிரிழந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை வழங்க மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதி கடந்த 2020-ல் ஏற்படுத்தப்பட்டது.

இதில், மருத்துவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் சேர்ந்து, பங்களிப்பாக கடந்த 2020-21-ல் ரூ.6 ஆயிரம் மொத்தமாக செலுத்தினர். பின்னர் பணியின்போது உயிரிழக்கும் அரசு மருத்துவர்களுக்கு விருப்ப பங்களிப்பு நிதியில் இருந்து, ரூ.1 கோடி வழங்க கடந்த 2021 அக்.12-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, 2020 மார்ச் முதல் மாதம்தோறும் ஊதியத்தில் இருந்து ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை இத்திட்டத்தில் 9,907 மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்து சந்தா செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியில் இருந்து 2020, 2021-ம் ஆண்டுகளில் பணியின்போது உயிரிழந்த 9 மருத்துவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலைகள், 2022-ல்பணியின்போது இறந்த 4 மருத்துவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.1 கோடிக்கான காசோலைகள் என மொத்தம் ரூ.8.50 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஏ.சண்முககனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.