ருத்ரன் விமர்சனம்: பழங்கால திரைக்கதையில், அதைவிடப் பழைமையான ஒரு கதையில் ஓர் ஆதிகால சினிமா!

குடும்பம், காதல், வேலை என மகிழ்ச்சியாக வாழும் ருத்ரனின் குடும்பத்தின் மேல் ஒரு பெரிய கடன் வந்து விழ, அதிலிருந்து மீள வெளிநாட்டில் ஐடி வேலைக்குச் செல்கிறார் ருத்ரன். அதனாலேயே, ருத்ரனின் மொத்த குடும்பமும் வில்லன் ‘பூமி’யால் கொல்லப்படுகிறது. வில்லன் பூமி யார், அவர் ஏன் ருத்ரனின் குடும்பத்தைக் கொன்றார், பூமியை ருத்ரன் பழிவாங்கினாரா என்பதை எளிதில் யூகிக்கும்படியான மசாலா சினிமா டெம்ப்ளேட் காட்சிகளை வரிசையாக அடுக்கி, திரைக்கதை அமைத்திருக்கிறார் கே.பி.திருமாறன், அதற்குத் திரையில் உயிர் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கதிரேசன்.

ருத்ரன் விமர்சனம்

துள்ளலும் எள்ளலும் மிக்க ருத்ரனாகராகவா லாரன்ஸ், டான்ஸிலும் சென்டிமென்ட்டிலும் அடித்து ஆடினாலும், ரொமான்ஸிலும் சண்டைக்காட்சிகளிலும் ஓவர் டோஸாகவே பெர்ஃபாமென்ஸ் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் எல்லாம் பழங்கால தெலுங்கு சினிமாக்களுக்கே டஃப் கொடுக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அவரின் மேனரிஸம் இதுவரையிலான ராகவா லாரன்ஸ் படங்களின் பார்த்துப் பழகிய ரியாக்‌ஷன்களையே நினைவுபடுத்துகிறது. கதாநாயகி பிரியா பவானிஷங்கருக்கு முதற்பாதியில் எந்த வேலையும் இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை நகர்விற்குக் கைகொடுக்கும் கதாபாத்திரம். அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். ருத்ரனின் அம்மா, அப்பாவாக வரும் பூர்ணிமா பாக்யராஜ் – நாசர், நண்பராக வரும் காளி வெங்கட், கதாநாயகனுக்கு உதவும் காவலராக வரும் இளவரசு என அனைவருமே அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார்கள்.

துறைமுக தாதாவாகவும், கொலைகார கும்பலின் தலைவனாகவும் வருகிறார் சரத்குமார். தோற்றம், உடல்மொழி போன்றவற்றில் மிரட்டினாலும், வழக்கமான வில்லன் கதாபாத்திரம் செய்யும் அதே பன்ச் டையலாக், அதே மிரட்டல், அதே கோபம் எனப் படம் முழுவதும் மாற்றங்களின்றி வருகிறார். ரெடின் கிங்ஸ்லி தன் அறிமுக காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.

ருத்ரன் விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ், தரண் குமார் கூட்டணியின் பாடல்களில் எந்தப் புதுமையும் இல்லை. காதல், அப்பா சென்டிமென்ட், அம்மா சென்டிமென்ட் என எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை. அஃப்ரோ இசையில் முதல் பாடலாக வரும் ‘ஜொர்தாலயா’ பாடல் மட்டும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் சாம் சி.எஸ் இரண்டாம் பாதிக்கு வலுசேர்த்திருக்கிறார். கலர் ஃபுல்லான முதல் பாதிக்கும், விறுவிறுப்பான இரண்டாம் பாதிக்கும் தேவையான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர். ஆனால், அவரின் முத்திரைக் காட்சிகள் ஒன்றுகூட இல்லை. அப்பட்டமாகத் தெரியும் சி.ஜி. உருவாக்கத்திலான ‘வெளிநாட்டு’ காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதற்பாதியில் தவறவிட்ட பணியை இரண்டாம் பாதியில் ஓரளவிற்குச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி. பலவீனமான திரைக்கதை கைவிட்ட இடங்களை தன் படத்தொகுப்பால் சரி செய்ய முயன்றிருக்கிறார்.

ருத்ரன் விமர்சனம்

வீட்டிற்குச் செல்லப் பிள்ளையான துடிப்பான கதாநாயகன், கருணை வடிவான கதாநாயகி, கதாநாயகனின் கண்டதும் காதல், ஓப்பனிங் சாங், கதாநாயகியைப் பார்த்த மூன்றாவது காட்சியில் டூயட், அதிரடி ஆக்‌ஷன், வில்லனின் அடியாட்களை ஸ்கெட்ச் போட்டுக் கொல்லும் கதாநாயகனின் ஹீரோயிஸம், கதாநாயகனைத் தேடும் வில்லன் என எந்தப் புதுமையும் இல்லாமல், முழுக்க முழுக்க பழங்கால சினிமாவாகவே செல்கிறது முதற்பாதி. அயர்ச்சியான முதற்பாதியை முடிந்தளவிற்கு தன் வழக்கமான மேனரிசத்தால் காப்பாற்ற படாதப்பாடுபடுகிறார் ராகவா லாரன்ஸ். ஆனால், அந்த முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. கதாநாயகனின் குடும்பத்தைப் பற்றிய காட்சிகளும் பார்த்துப் பழகியதாகவே இருப்பதால், பார்வையாளர்கள் மனதில் பதியாமல், வெறும் காட்சிகளாகவே கடந்து செல்கிறது.

கதாநாயகனின் பின்கதை, வில்லனின் பின்கதை, இருவருக்கும் இடையிலான தொடர்பின் பின்கதை, கதாநாயகன் வில்லனை நெருங்கும் படலம் என இரண்டாம் பாதி சற்றே வேகமாகப் பயணிக்கிறது. ஆனால், எல்லாம் எளிதில் யூகிக்கும்படியான காட்சிகள்! வில்லன் பூமி எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் என்ற காரணத்தில் கொஞ்சம் புதுமை இருக்கிறதே தவிர, கிஞ்சித்தும் லாஜிக் இல்லை.

படத்தில் உள்ள மொத்த கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மட்டுமல்ல, அக்கதாபாத்திரங்களின் முடிவுகளுமே பார்த்துப் பழகிய திருப்பங்களாகவே உள்ளன. அப்பா – மகள் சென்டிமென்ட்டிற்கு நிதானமான, அழுத்தமான காட்சிகள் இல்லாததால், அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

ருத்ரன் விமர்சனம்

எளிதில் யூகிக்கும்படியான திருப்பங்கள், லாஜிக் மீறல்கள் எனப் போய்க்கொண்டிருக்கும் திரைக்கதையில், ராகவா லாரன்ஸின் துக்கத்தையும், பதற்றத்தையும் கடத்தும் காட்சிகள் மட்டும் கொஞ்சம் ஆறுதல் தருகின்றன. அதிரடி சண்டைக்காட்சிகளுக்குப் பின் வலுக்கட்டாயமாக இறுதியில் சேர்க்கப்பட்ட உருக்கமான காட்சிகள், பலவீனமான திரைக்கதைக்கு கைகொடுக்கும் என இயக்குநர் நம்பியிருக்கிறார். ஆனால், அது மொத்த படத்திலிருந்தும் விலகி, துருத்தலாகவே நிற்கிறது. சண்டைக் காட்சிகளில் இயற்பியல் விதிகள் மட்டுமல்ல, பல விதிகள் மீறப்பட்டு ஃபேன்டஸி படங்களுக்கே டஃப் கொடுக்கிறது.

எல்லா வகையிலும் பார்த்துப் பழகிய பழங்கால சினிமா என்ற வகையில் `ருத்ரன்’ டைம்பாஸ் படமாகக் கூட இல்லாமல் நம்மை டயர்டு மட்டுமே ஆக்குகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.