போட்டிக்கு தயாராகும் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புகள் – கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ‘இரட்டை இலை’ யாருக்கு?

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியே வேட்பாளர்கள் நிறுத்தப்படும் பட்சத்தில், ‘இரட்டை இலை’ சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நடந்துவரும் அதிகார மோதலில் நீதிமன்ற தீர்ப்புகளைத் தொடர்ந்து, பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. கட்சியின் பெரும்பகுதியை அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டாலும், தேர்தலில் போட்டியிடும்போது சின்னம் பெறுவதில் உள்ள சிக்கல் தொடர்கிறது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு 5 சதவீதம் இருக்கும் தமிழர்களின் வாக்குகள் இதில் முக்கியத்துவம் பெறுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கோலார் தங்கவயல், காந்தி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் 9 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக களமிறங்க திட்டமிட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் தொகுதி பங்கீட்டில் தமிழர் செல்வாக்கு உள்ள தொகுதிகளை கேட்டுப் பெற முயற்சி எடுக்கப்பட்டது. 10 தொகுதிகளை பட்டியலிட்டு, அதில் சிலவற்றை கேட்டுப் பெற தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதுதொடர்பாக பாஜக தலைவர் எடியூரப்பாவை, ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி சந்தித்து பேசினார்.

ஆனால், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்துவிட்டது. அதிமுக திட்டமிட்டிருந்த கோலார் தங்கவயல், காந்தி நகர், பெங்களூரு தெற்கு தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், கூட்டணி சார்பில் போட்டியிட இனி வாய்ப்பு இல்லை. இதனால், அதிமுக தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில்,பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வானதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தனித்து போட்டியிடுவது என்று அவர் முடிவெடுத்தால், வேட்புமனு தாக்கல் முடிவடையும் நாளான ஏப்.20-ம் தேதிக்குள் அவர் முடிவெடுத்தாக வேண்டும். ஓபிஎஸ் தரப்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், இரட்டை இலை சின்னம் பெறுவது பெரும் தலைவலியாக மாறும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு விலகிக் கொண்டதால் சின்னம் ஒரு பிரச்சினையாக இல்லை. ஆனால், கர்நாடக தேர்தலில் போட்டி உருவானால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். இந்த சூழலில், சின்னம் குறித்து இரு தரப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:

இபிஎஸ் தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்: ஒரு கட்சியின் உச்சபட்ச பதவியில் யார் இருக்க வேண்டும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது. அதை கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்யும். அரசியலமைப்பு சட்டப்படிதான் தேர்தல் ஆணையம் செயல்பட முடியும். எம்ஜிஆர் வகுத்த விதிகளின்படி, திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழுவில் 94.5 சதவீத உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து, கட்சியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கியுள்ளனர். அவர் இன்னமும் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றும், கர்நாடக தேர்தலில் இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான் கிடைக்கும் என்றும் நம்பிக்கொண்டு இருப்பதில் பயன் இல்லை.

ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்: அதிமுகவில் முறையாக தேர்தல் நடத்தி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து, அதே நிலை இன்று வரை நீடிக்கிறது. இது 2026-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும். அதுவரை ஓபிஎஸ்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர். அப்படி இருக்க, கர்நாடக மாநில தேர்தலில் எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று கர்நாடக மாநில நிர்வாகிகள் நம்புவதில் தவறு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இப்படி, இருதரப்பும் தங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

தேர்தல் ஆணைய ஆவணங்களில் ‘ஓபிஎஸ் – ஒருங்கிணைப்பாளர், இபிஎஸ் – துணை ஒருங்கிணைப்பாளர்’ என்றுதான் பதிவாகி உள்ளது. இதை மாற்றி, தன்னை பொதுச் செயலாளர் என அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு இபிஎஸ் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், அதில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இதனால், அவ்வாறு மாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 10 நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

எனவே, வேட்புமனு பரிசீலனைக்கு முன்பு, தேர்தல் ஆணையத்தின் முடிவு, இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக அமைந்தால், அவரது தரப்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இல்லாவிட்டால், இருதரப்புக்கும் இரட்டை இலை கிடைக்காமல் போகும் நிலையே உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.