Charlie Chaplin: மெளன மொழியில் சாமானிய அரசியல்… இன்றைக்கும் தேவைப்படும் கலைஞன் சார்லி சாப்ளின்!

சென்னை: பல யுகங்கள் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர்களில் கலைஞர்களுக்கு முக்கியமான இடம் உள்ளது.

ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல் சாமானிய மக்களின் உரிமைகளை பேசும் சமூகத்தின் கலைஞனாக வலம் வருபவர்கள் இதில் ஒருசிலரே.

அப்படியொரு மக்கள் கலைஞனாக வாழ்ந்து மறைந்தவர் சார்லி சாப்ளின்.

தனது உடல்மொழியையே தனித்துவமான திரை மொழியாக மாற்றிய சார்லி சாப்ளினின் சில சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

இன்றைக்கும் தேவைப்படும் சார்லி சாப்ளின்
சமூகத்திற்கு எதிராக வெறுப்பரசியல் பேசுவதும் மனிதம் சிதைப்பதும் பாசிசத்தின் முதல் குறிக்கோள். அப்படியான பாசிசத்துக்கு எதிராக தனது உடல்மொழியை ஆயுதமாக ஏந்தியவர் சார்லி சாப்ளின். அவரது மெளனமான உடல்மொழி உலகெங்கும் படர்ந்திருந்த பாசிசத்தை அசைத்துப் பார்த்தது தான் சார்லி சாப்ளினின் மகத்தான சாதனை எனலாம்.

சர்வாதிகாரி ஹிட்லரைப் போலவே அரை இன்ச் மீசையை வைத்துக்கொண்டு அவரையே கதிகலங்க செய்தவர் சார்லி சாப்ளின். ஹிட்லர் பத்தே ஆண்டுகளில் தனது சர்வதிகார திமிரால் மண்ணோடு மண்ணாக காணாமல் போய்விட்டார். ஆனால், சார்லி சாப்ளின் மட்டுமே காலங்களைக்கடந்து இன்றும் மக்களின் புன்னகையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்பதுதான் சார்லி சாப்ளினின் முழுப்பெயர். 1889ல் இதே ஏப்ரல் மாதம் 16ம் தேதி பிறந்த சார்லி சாப்ளின், ஹாலிவுட்டில் முடிசூடா மன்னனாக வலம் வந்ததுடன், நடிப்பின் புதிய இலக்கணமாகவும் கொண்டாடப்பட்டார். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், எடிட்டர், தயாரிப்பாளர் என இவர் தொடாத உச்சங்களே கிடையாது.

அதேநேரம், சாப்ளினின் புன்னகைக்குப் பின்னால் ஏராளமான கண்ணீர்த் துளிகள் உள்ளன. லண்டனில் மிக வறுமையான குடும்பத்தில் பிறந்த சாப்ளின், இளம் வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். பின்னர் தற்செயலாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, இறுதியில் அதுவே அவரது வாழ்க்கையாகிவிட்டது. முக்கியமாக காமெடியில் தனித்துவமான உடல்மொழியை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.

மக்கள் அனைவருக்கும் தனது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதால் நகைச்சுவையை ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டார். தனது படங்கள் அனைத்திலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சாப்ளின், சர்வாதிகாரி ஹிட்லரை எதிர்த்த கம்யூனிஸ்ட் என்பது பலருக்கும் தெரியாது. அவரது ‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படம் இன்றும் கொண்டாடப்படுகிறது. மிக தைரியமான அரசியல் படமான இது, சர்வாதிகாரத்தை கேலி செய்து கிழித்து தொங்கவிட்டது.

சாப்ளினின் இறுதி உரை மிக முக்கியத்துவம் பெற்றது. அதில், “இந்த உலகம் அனைவருக்குமானது. அன்பால் நிரப்பப்பட வேண்டியது, நாம் இயந்திரங்கள் இல்லை, கால்நடைகள் இல்லை, மனிதர்கள். மக்களிடம் அடிமைத்தனம் தேவையில்லை, நமக்கு அன்புதான் வேண்டும். நாம் பாதை மாறி வெறுப்பை நிரப்புகிறோம். ரத்தம் சிந்த வைக்கிறோம்” என சர்வாதிகாரி பேசவேண்டிய இடத்தில் நின்று பேசினார். தன் படங்களில் அரசியலை வைத்து, அதன் மூலம் தான் அரசியல் செய்யாமல், மக்களுக்கு அரசியலை புரியவைத்தவர் சார்லி சாப்ளின் இப்போதும் தேவைப்படுகிறார் என்பதே உண்மை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.