கொதித்த நடிகர் ராஜ்கிரண்.. “திப்பு சுல்தானையே மறைப்பீர்களா? ஆங்கிலேயனை அலறவிட்டவர்!” இவ்ளோ சாதனையா?

சென்னை: இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக களத்தில் இறங்கி போர்புரிந்து வீரமரணம் அடைந்த திப்பு சுல்தானை சரித்திரத்தில் மறைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், குப்பைகளால் சூரியனை மறைக்க முடியாது என்று நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், “மாவீரர் திப்பு சுல்தான் அவர்கள், இந்திய சுதந்திரப்போராட்டத்தின் “மூலவித்து” என்பதை சரித்திரத்தில் இருந்து நீக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சூரியனை, குப்பைகளால் மூடி மறைத்து விட, ஒருபோதும் முடியாது.

மைசூரை ஆண்ட மாவீரன் திப்பு சுல்தான் இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர். திப்பு சுல்தான் குறித்து ‘இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் உருவாக்கம்’ என்று, ‘1930 ‘யங் இந்தியா’ இதழில் மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். “ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகவும்,
பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான்” என்று ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார்.

மஹாராஷ்டிர இந்து மன்னன், சிருங்கேரி மடத்தை கொள்ளையடித்து,
அங்கிருந்த சாரதா தேவி சிலையையும் சேதப்படுத்தியதை, அந்த மடாதிபதி
திப்பு சுல்தானுக்கு தெரியப்படுத்த, கேரளாவில் பிரிட்டிஷாருடன் போர்
புரிந்துகொண்டிருந்த திப்பு சுல்தான், தனது பாதுகாப்புப்படையை உடனே
சிருங்கேரிக்கு அனுப்பி, மடத்திலிருந்து மஹாராஷ்டிர படைகளை விரட்டியதோடு, மடத்தை சீரமைக்கவும், சாரதா தேவி சிலையை மறுநிர்மானம் செய்யவும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு, நிதிகளையும் வழங்கினார்.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலை போரின் நாயகர்களான கட்டபொம்மன், கோபால் நாயக்கர், மருது சகோதரர்கள்,வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு உந்து சக்தியாய்
இருந்ததோடு, ஆயுதங்களும் கொடுத்து உதவியவர் திப்பு சுல்தான்தான். திப்புவை கண்டு அஞ்சுவதாக 1798-ம் ஆண்டு தமது கும்பினி தலைமைக்கு கடிதம் எழுதினான் கவர்னர் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

சமத்துவம், சகோதரத்துவம் சுதந்திரம் என்ற சொற்கள் இந்த நாட்டில், திப்புவின் மண்ணில்தான் முதன்முதலில் ஒலித்தன. பாளையக்காரர்கள், ஆற்காடு நவாப், ஹதராபாத் நிஜாம், தொண்டைமான் ஆகிய அனைவைரும் ஆங்கிலேயர்கள் பின்னால் நிற்க, தன்னந்தனியாக எதிரிகளை எதிர்கொண்டார் திப்பு. எந்த சாதி மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, உழுபவருக்கே நிலம் சொந்தம் என்று திப்பு பிரகடனம் செய்தார்.

Actor Rajkiran write the history of Mysore king Tippu Sulthan

சென்னை மாகாணத்தை போல் அல்லாமல் மைசூர் அரசில் தலித் சமுதாயத்தினருக்கு பல இடங்களில் நில உடைமையை வழங்கினார் திப்பு.
ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புருத்த மாட்டோம் என்று வருவாய் ஊழியர்களிடம் உறுதிமொழி வாங்கினார் திப்பு.
1792 போருக்கு பின் வேலூரிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசில் குடியேறினர்.

கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையை கட்டுவதற்காக 1798-ல் திப்புசுல்தான் அடிக்கல் நாட்டினார். இந்துஸ்தானம் முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை ஆகியவற்றை அமைக்கவும் திப்பு திட்டம் வகுத்திருந்தார். மது விற்பனையை முற்றிலும் ஒழித்து மதுவிலக்கை அமல்படுத்தினார். கஞ்சா விற்பனையை தடை செய்தார்.

எல்லா சமுதாய மக்களின் ஆலையங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, மானியம் வழங்கி, அதனை பராமரித்தும் வந்தார்.
அநாதை இந்து சிறுமிகளை கோவிலுக்கு விற்பனை செய்யும் தேவதாசி முறையையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்ககூடாது என்று ஆணையிட்டார் திப்பு.

Actor Rajkiran write the history of Mysore king Tippu Sulthan

கோவில் மணி ஓசைக்கும் பள்ளிவாசலின் பாங்கு அழைப்பிற்கும் சம மரியாதை தந்தார் திப்பு. நெப்போலியனை வீழ்த்திய ஆர்த்தர் வெல்லெஸ்லி கூட திப்புவின் முன் நிற்கமுடியாமல் போனது வரலாறு. தன்னை, நாட்டின் மன்னன் என்று நினைக்காமல், “குடிமகன் திப்பு” என்று கூறுவதில் பெருமைப்பட்டவர் திப்பு. திருக்குர்ஆனின் அத்தனை போதனைகளையும் தன் வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்து வந்தார், திப்பு. ஆதலால், பிற மதத்தினர், இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறுவதை ஆதரிக்கவில்லை.

“இறைவன் நினைத்திருந்தால், எல்லா மக்களையும் இஸ்லாமியராகவே படைத்திருக்க மாட்டானா” என்றதோடு, அவரவர் மார்க்கம் அவரவர்க்கு என்றார். விடுதலை போரில் சரணடைய மறுத்து, வீரத்துடன் போரிட்டு தன்னுடன் மாண்ட 11,000 வீரர்களுள் ஒரு சாதாரண வீரனைப்போல, வீரமரணம் அடைந்தார் திப்பு சுல்தான். இந்தத்தகவல்கள் எல்லாம், புராண, இதிகாச கதைகள் அல்ல. லண்டன் அருங்காட்சியகத்தில், இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படும் வரலாறு.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.