Sasikumar – அயோத்தி வெற்றி இருக்கட்டும்.. எனக்கு ஒரு வருத்தம்தான் – சசிகுமார் எமோஷனல்

சென்னை: Ayodhi (அயோத்தி) மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த அயோத்தி படம் திரையரங்குகளில் 50 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனையொட்டி நடந்த விழாவில் சசிகுமார் கலந்துகொண்டு எமோஷனலாக பேசினார்.

சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் சசிக்குமார். முதல் படமே அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. அதனையடுத்து ஈசன் படத்தை இயக்கினார். இந்தப் படமும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் முழுநேர நடிகராகிவிட்டார் சசிகுமார்.

சசிகுமார் நடித்த அயோத்தி: தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் சசிக்குமார் நடித்த படம் அயோத்தி. மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த மார்ச் 3ஆம் தேதி வெளியான இப்படம் மதத்தை தாண்டி மனிதத்தை பேசுகிறது என அனைவரும் கொண்டாடினர். சசிகுமாரின் நடிப்பையும், படத்தின் மேக்கிங்கையும் பலரும் பாராட்டினர். மேலும் அயோத்தி படம் சசிகுமாருக்கு நடிகராக ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

அயோத்தியின் கதை சர்ச்சை அதேசமயம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் படத்தை சுற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. அதாவது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது எழுத்தாளர் நரன், தனது வாரணாசி கதையை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து மாதவராஜ் என்ற எழுத்தாளரும் நான் எழுதிய கதையை அயோத்தி படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால், அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார். இப்படி இந்தக் கதைக்கு மூன்று எழுத்தாளர்கள் சொந்தம் கொண்டாடினார்கள். இருந்தாலும் படம் அமோக வரவேற்பைப் பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

அயோத்தி வெற்றி விழா: இந்நிலையில் அயோத்தி வெளியாகி 50 நாள்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் படக்குழு சார்பில் விழா ஒன்று நடத்தப்பட்டது. இதில் சசிக்குமார், இயக்குநர் மந்திரமூர்த்தி மற்றும் படத்தில் நடித்த, பணியாற்றிய கலைஞர்கள் கலந்துகொண்டனர். இயக்குநர் சமுத்திரக்கனியும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சசிகுமார் பேச்சு: விழாவில் பேசிய சசிகுமார், “பல வருடங்களுக்கு பிறகு நான் ஒரு ஷீல்ட் வாங்குறேன். படம் பார்த்த எல்லோரும் நல்லா இருக்குனு சொன்னது சந்தோஷமா இருந்தது.‌ படத்திற்கு முறையான விளம்பரங்கள் செய்ய முடியவில்லை. வேறுவேறு காரணங்கள் இருந்ததால் விரைவில் ரிலீஸ் செய்யகூடிய சூழல். நேரமில்லாமல் விளம்பரம் செய்யவில்லை.. விளம்பரம் இல்லாமல் படம் வந்ததே தெரியல..ஆனா எனக்கு நம்பிக்கை இருந்தது.

நம்பிக்கை இருந்தது: என்னுடைய முந்தைய படங்கள் சரியாக போகாததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. நான் உதவி இயக்குனராக பணியாற்றிய சேது படமும் இப்படிதான் மெல்ல வரவேற்பு கிடைத்தது. எனது முதல் படம் சுப்பிரமணியபுரம் படத்திற்கும் இப்படிதான் மெதுவாக வரவேற்பு கிடைத்தது. இதை மக்கள் அவங்க படமா எடுத்துட்டு போயிட்டாங்க.. படம் வரவேற்பை பெறும் என்று நம்பிக்கை இருந்தது‌.

Sasikumar Emotional Speech in Ayodhi 50th day celebration

எனக்கு ஒரே ஒரு சோகம்தான்: எத்தனை பேர் நண்டு படம் பார்த்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அந்தப் படத்தில் லக்னோவிலிருந்து ஒரு தம்பதி உரையாடுவது போல் காட்சி இருக்கும். அவர்கள் அந்த ஊர் மொழியிலேயே பேசுவது போல் மகேந்திரன் அதை காட்சிப்படுத்தியிருப்பார்.

ஆனால் சில காரணங்களால் அவரால் அதை பயன்படுத்த முடியவில்லை. அவர் நினைத்ததை நாங்கள் செய்திருக்கிறோம். எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாலசந்தர் ஆகியோர் இருந்திருந்தால் இந்தப் படத்தை போட்டுக்காட்டியிருப்பேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.