ஆன்லைன் விளையாட்டுகள்.. புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.. என்னென்ன ரூல்ஸ்?

சென்னை: ஆன்லைன் விளையாட்டு குறித்த புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இந்த விதிகள் கடந்த 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து, அதை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

ஆனால் அந்த மசோதாவை ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டதாக ஆளும் கட்சி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன. இதனிடையே இந்த விளையாட்டால் கடனாளியான பலர் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் ஆன்லைன் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது.

கிடப்பில் போட்டிருந்த மசோதா மீது விளக்கங்களை கேட்டு அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். எனவே அந்த சட்ட மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவும் சில நாட்கள் கிடப்பில் போடப்பட்டு பின்னர் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து மசோதாவை சட்டமாக்கி உடனடியாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. தற்போது அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் 21 ஆம் தேதி தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குப்படுத்தும் விதிகள் 2023 என்று அழைக்கப்படும். 21 ஆம் தேதியிலிருந்து இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம் 2022க்கான சட்ட விதியாக இது ஏற்கப்பட வேணடும்.

ஆன்லைன் விளையாட்டுகளை அளிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் வெளியூர் நிறுவனங்கள் தங்களின் பெயரை பதிவு செய்தல், இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது. ஒரு மாதத்தில் ஆணையத்தில் இந்த நிறுவனங்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும். சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் செயலாளரிடம் ரூ 1 லட்சம் கொடுத்து பெயர் பதிவு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை பெறலாம்.

Tamilnadu government release gazette certificate for online gambling regulation

இந்த விண்ணப்பத்தை பெற்ற பிறகு அந்த நிறுவனத்தின பெயரை பதிவு செய்வதையோ அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கும் நடவடிக்கையையோ அதை கொடுத்த 15 நாட்களுக்குள் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். நிராகரிப்பதற்கு முன்னர் விண்ணப்பதாரருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தவறான தகவல்களை கொடுத்து சான்றிதழ் பெறப்பட்டால் அதற்கான விளக்க நோட்டீஸை ஆணையம் அளிக்க வேண்டும்.

அந்த நோட்ஸுக்கு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசு நியமிக்கும். அவர்கள் 5 ஆண்டுகளோ அல்லது 70 வயது வரையோ இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் நீடிக்கலாம். அவர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் மறுபணி நியமனம் கிடைக்காது என அந்த அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.