கர்நாடக தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

பெங்களூரு,

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 44 மனுக்கள் (4 தொகுதிகளை தவிர) ஏற்கப்பட்டுள்ளன.

மனுக்கள் வாபஸ் பெற இன்று(திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் மட்டுமே மனுக்களை வாபஸ் பெற காலஅவகாசம் உள்ளது. போட்டியில் இருந்து விலக விரும்புகிறவர்கள் இன்று மதியம் 3 மணிக்குள் தங்களின் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் டிக்கெட் கிடைக்காத பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் அந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டி வேட்பாளர்களின் மனுவை வாபஸ் பெற வைக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதனால் இன்று அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) மாலையில் வெளியிடப்படுகிறது. இதில் எந்தெந்த தலைவர்களிடையே போட்டி ஏற்படும், தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்றே சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன. இந்த இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.