ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்தை வீழ்த்தி டெல்லி 2-வது வெற்றி

ஐதராபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 34-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அவரும், விக்கெட் கீப்பர் பில் சால்ட்டும் டெல்லியின் இன்னிங்சை தொடங்கினர்.

வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாரின் முதல் ஓவரிலேயே சால்ட் (0) விக்கெட் கீப்பர் கிளாசெனிடம் கேட்ச் ஆனார். இதன் பின்னர் வார்னருடன், மிட்செல் மார்ஷ் இணைந்தார். யான்செனின் ஒரே ஓவரில் மார்ஷ் 4 பவுண்டரிகளை விரட்டினார். ஆனால் மார்சின் (25 ரன்) அதிரடிக்கு டி.நடராஜன் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் வார்னர் (21 ரன், 20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), சர்ப்ராஸ் கான் (10 ரன்), அமன்கான் (4 ரன்) ஆகியோருக்கு ‘செக்’ வைத்து அதிர்ச்சி அளித்தார். மூன்று பேரும் ஒரே மாதிரி பந்தை விரட்ட முயற்சித்து கேட்ச் ஆகிப்போனார்கள். இதனால் டெல்லி அணி 62 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.

145 ரன் இலக்கு

இந்த நெருக்கடியான சூழலில் மனிஷ் பாண்டேவும், அக்ஷர் பட்டேலும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டு சவாலான நிலைக்கு கொண்டு சென்றனர்.

ஸ்கோர் 131 ஆக உயர்ந்த போது அக்ஷர் பட்டேல் 34 ரன்களில் (34 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார். இதே போல் மனிஷ் பாண்டே 34 ரன்னில் (27 பந்து, 2 பவுண்டரி) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். கடைசி ஓவரில் அன்ரிச் நோர்டியா (2 ரன்), ரிபல் பட்டேல் (5 ரன்) ஆகியோரும் ரன்-அவுட் ஆனார்கள்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 4 ஓவர்களில் 11 ரன் மட்டுமே வழங்கி 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் 145 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியில் ஹாரி புரூக் (7 ரன்) அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் போல்டு ஆனார். 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வாலும், மாற்று ஆட்டக்காரர் ராகுல் திரிபாதியும் இணைந்து ஸ்கோரை 11-வது ஓவர் வரை சீரான வேகத்தில் நகர்த்தினர். அகர்வால் 49 ரன்னிலும் (39 பந்து, 7 பவுண்டரி), திரிபாதி 15 ரன்னிலும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். தொடர்ந்து அபிஷேக் ஷர்மா (5 ரன்), கேப்டன் மார்க்ரம் (3 ரன்) ஆகியோரை சுழற்பந்து வீச்சாளர்கள் கபளீகரம் செய்ய, ஐதராபாத்துக்கு நெருக்கடி அதிகமானது.

கடைசி கட்டத்தில் போராடிய விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் (31 ரன், 19 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) 19-வது ஓவரில் ஆட்டமிழந்தது ஐதராபாத்துக்கு பாதகமாக மாறியது.

டெல்லி வெற்றி

பரபரப்பான கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ்குமார் வீசினார். அட்டகாசமாக பந்து வீசிய அவர் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். வாஷிங்டன் சுந்தர் (24 ரன்) களத்தில் நின்றும் பலன் இல்லை.

ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 150 ரன்னுக்கும் குறைவான இலக்கை நிர்ணயித்து டெல்லி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். டெல்லி தரப்பில் நோர்டியா, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 7-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது 2-வது வெற்றியாகும். ஐதராபாத்துக்கு 5-வது தோல்வியாகும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.