உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியில் மீண்டும் ரஹானே.!

புதுடெல்லி,

2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வு குழுவினர், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து 15 பேர் கொண்ட அணியை முடிவு செய்துள்ளனர்.

இதன்படி கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று இருந்த சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டனர்.

ரஹானேவுக்கு வாய்ப்பு

மராட்டியத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் அஜிங்யா ரஹானே 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் கடைசியாக 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஆடினார். அந்த தொடரில் 6 இன்னிங்சில் வெறும் 136 ரன் மட்டுமே எடுத்து சொதப்பியதால், ஓரங்கட்டப்பட்டார்.

ஆனாலும் நம்பிக்கை இழக்காத 34 வயதான ரஹானே, இழந்த பார்மை மீட்க உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். இந்த சீசனில் ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக இரட்டை சதம் உள்பட 634 ரன்கள் (11 இன்னிங்ஸ்) குவித்தார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் கண்டுள்ள அவர் மும்பை இந்தியன்சுக்கு எதிராக 19 பந்துகளில் அரைசதம் விளாசி பிரமாதப்படுத்தினார். இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 அரைசதம் உள்பட 209 ரன்கள் எடுத்து சூப்பர் பார்மில் உள்ளதால் அவருக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு லண்டனில் ஆபரேஷன் செய்து இருப்பதால் இந்த போட்டியில் இருந்து விலகிவிட்டார். அதுவும் ரஹானேவுக்கு அணியின் வாசல் கதவு திறக்க ஒரு காரணமாகும்

துணை கேப்டன் யார்?

அணியின் துணை கேப்டனாக யாருடைய பெயரும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கடைசி 2 டெஸ்டில் துணைகேப்டனாக செயல்பட்ட புஜாராவுக்கு துணை கேப்டன் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணி வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானே, லோகேஷ் ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.