ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தாவை பழிதீர்க்கும் முனைப்பில் பெங்களூரு..!!

பெங்களூரு,

பெங்களூருவும், கொல்கத்தாவும் 2-வது முறையாக மோதுகின்றன. இந்த சீசனில் இரு அணிகள் 2-வது முறையாக மல்லுக்கட்டும் முதல் ஆட்டம் இது தான். ஏற்கனவே கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த மோதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை பந்தாடியது. அதற்கு சொந்த ஊரில் பழிதீர்க்க பெங்களூரு அணி வரிந்து கட்டுகிறது.

பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சுக்கு விலாபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் பேட்டிங் செய்து விட்டு 2-வது இன்னிங்சில் மாற்று வீரராக ஓய்வு எடுத்தார். இதனால் விராட் கோலி அணியை வழிநடத்தினார். அதே பார்முலா இன்றைய ஆட்டத்திலும் கடைபிடிக்கப்படும் என்று தெரிகிறது. பெங்களூரு அணியின் பேட்டிங் முதுகெலும்பாக பிளிஸ்சிஸ் (5 அரைசதத்துடன் 405 ரன்), விராட் கோலி (4 அரைசதத்துடன் 279 ரன்), கிளைன் மேக்ஸ்வெல் (3 அரைசதத்துடன் 253 ரன்) ஆகியோர் திகழ்கிறார்கள். இவர்களில் யாராவது ஒருவர் நிலைத்து நின்று விட்டாலே பெங்களூரு கணிசமான ஸ்கோரை சேர்த்து விடும். ஆனால் 3 பேரும் சீக்கிரம் ஆட்டமிழந்தால் பெங்களூரு அணிக்கு திண்டாட்டம் தான். பந்து வீச்சில் முகமது சிராஜ் (13 விக்கெட்), ஹர்ஷல் பட்டேல் (10 விக்கெட்) மிரட்டுகிறார்கள். முந்தைய இரு ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தானை தோற்கடித்த பெங்களூரு அணி அதே உத்வேகத்துடன் களம் இறங்கும்.

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியதால் பெரும் நெருக்கடியில் தவிக்கிறது. இதில் டெல்லிக்கு எதிராக 127 ரன்னில் சுருண்டதும் அடங்கும். கொல்கத்தா அணியில் சரியான ஆடும் லெவன் வீரர்கள் இன்னும் அமையவில்லை. 19 வீரர்களை பயன்படுத்திய பிறகும் மாற்றம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ரிங்கு சிங் (233 ரன்), வெங்கடேஷ் அய்யர் (254 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை. இதே போல் எதிர்பார்த்த சுழல் மன்னன் சுனில் நரினின் (7 ஆட்டத்தில் 6 விக்கெட்) பந்து வீச்சும் எடுபடவில்லை. வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 7 ஆட்டத்தில் ஆடி வெறும் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார். இவற்றை எல்லாம் சரி செய்து, பேட்டிங்குக்கு உகந்த பெங்களூரு மைதானத்தில் ரன்மழை பொழிந்தால் மட்டுமே கொல்கத்தா அணியால் சரிவில் இருந்து மீள முடியும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.