ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொள்வீர்களா.. சட்டென வந்த கேள்வி.. இபிஎஸ் சொன்ன அடடே பதில்..

டெல்லி:
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் வந்தால் அவரை சேர்த்துக் கொள்வீர்களா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நச்சென பதிலளித்திருக்கிறார்

.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

அதிமுக – பாஜக இடையேயான கூட்டணியில் விரிசல் அதிகமாகிக் கொண்டிருந்த சூழலில், இந்த சந்திப்பு நடந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அதிமுக – பாஜக இடையே சமீபகாலமாக நடந்து வரும் மோதல் போக்கு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மோதல் போக்கை கைவிடுமாறு அமித் ஷா கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும், எந்தெந்த தொகுதிகளில் ஒதுக்கப்படும் என்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது பேச்சு தொனி முற்றிலும் மாறி இருந்தது. குறிப்பாக, அண்ணாமலை பற்றிய கேள்விக்கு பவ்யமாகவே அவர் பதிலளித்தார். சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை பற்றி நிருபர்கள் கேட்ட போது, “அவரை பற்றி என்னிடம் கேட்காதீங்க.. அவர் ஒரு முதிர்ச்சியில்லாத அரசியல்வாதி” எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, இன்று அப்படியே ப்ளேட்டை மாற்றினார்.

“அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த தகராறும் கிடையாது. எங்கள் கூட்டணி தொடர்கிறது. இனிமேலும் தொடரும். அவர்களின் கட்சியை வளர்ப்பதற்காக அண்ணாமலை பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை” என அவர் கூறினார்.

இதனைத் தொடர்நது, ஓபிஎஸ் மனம் மாறி வந்தால் அதிமுகவில் சேர்த்துக் கொள்வீர்களா என ஒரு நிருபர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பொதுச்செயலாளராக பதவியேற்ற போதே, இது பற்றி தெளிவாக கூறியிருக்கிறேன். ஒருசிலரை தவிர, அதிமுகவுக்கு விசுவாசமானவர்கள், அதிமுக ஆட்சிக்கட்டிலில் ஏற வேண்டும் என்ற விருப்பமுடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தாராளமாக கட்சியில் இணையலாம். அந்த ஒருசிலரில் ஓபிஎஸ் இருக்கிறாரா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்றார்.

மேலும், “திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழு எடுக்கும் முடிவுக்குதான் அனைவரும் கட்டுப்ப வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.