குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்: இறையன்பு நடத்திய ஆய்வு!

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (30.04.2023 ) ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால் பணிகள்? இறையன்பு அதிகாரிகளுடன் ஆய்வு!

தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தால் ரூபாய் 60.55 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 112 குறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளவாறு தொழிற்கூடங்கள் கட்டப்பட்டு வரும், 1.31 இலட்சம் சதுர அடி நிலப்பரப்பில், தரை தளம் + 4 மாடிகளுடன் கூடிய கட்டடம் செப்டம்பர் 2023 ல் திறந்து வைக்க தயார் நிலையில் இருக்கும் கட்டிடத்தையும், அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில், ரூபாய் 29.5 கோடி மதிப்பீட்டில், 5 மாடிகளுடன் கூடிய சுமார் 800 புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்கி பணிபுரியும் வகையில், தங்கும் வசதியுடன் கூடிய “தொழிலாளர் தங்கும் விடுதி கட்டுமான பணிகளையும், தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்துடன் கலந்துரையாடி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை களைய உத்திரவாதம் அளித்தார்.

பின்னர் திருமுடிவாக்கம் தொழிற் பேட்டையில் 47.62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள துல்லியமான உற்பத்திக்கான மாபெரும் தொழில் குழுமங்களுக்கான திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், அதற்கான இடத்தினையும் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

மேலும், அவர் தமிழ்நாடு அரசால் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியங்களால் பயனடைந்த, பெண் தொழில் முனைவோர், ஆதி திராவிட தொழில் முனைவோர் மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களால் நடத்தப்படும் தொழில் அலகுகளை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து அத்திப்பட்டில் தமிழ்நாடு அரசின் கேர்ஸ் (கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம்) திட்டத்தின் கீழ் ரூ. 25 இலட்சம் மானியம் பெற்று நடத்தப்படும் ஓம் நமசிவாயா என்ற லேசர் கட்டிங் நிறுவனத்தையும் ,அய்யனம்பாக்கத்தில் பி.எம்.இ.ஜி.பி திட்டத்தின் கீழ் மானிய உதவியுடன் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ சாய் இண்டீரியர் (மர வேலைகள்) அலகு,பூந்தமல்லியில், பி.எம்.எஃப்.எம்.இ திட்டத்தின் (உணவு பதப்படுத்துதலை ஊக்குவிக்கும் திட்டம்) கீழ் மானிய உதவியுடன் நிறுவப்பட்ட நம்ம எண்ணெய் அலகு, திருமுடிவாக்கத்தில் உள்ள இன்ஃபோகஸ் நிறுவனத்தின் பி.சி.பி (பிரின்டட் சர்க்யூட் போர்ட்) தயாரிக்கும் அலகு மற்றும் தியாகராஜா மெஷினிங் வொர்க்ஸ், திருமுடிவாக்கம் என்ற அலகினையும் இறையன்பு பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிகளின் போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்கள் துறை அரசு செயலர் வி. அருண் ராய், சிட்கோ மேலாண்மை இயக்குநர் எஸ். மதுமதி, தொழில் வணிகத்துறையின் கூடுதல் இயக்குநர் இரா. ஏகாம்பரம், மண்டல இணை இயக்குநர், ந.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.