இவ்வளவு நம்பமுடியாத சரித்திர சாதனைகளை செய்துள்ளாரா ரோஹித் சர்மா?

கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்திய அணியில் அதிரடி பேஸ்ட்மேனாக இருந்து வருகிறார் ரோஹித் சர்மா. இந்திய அணிக்காக பல போட்டிகளை தனி ஒருவராக முடித்து கொடுத்துள்ளார்.  உலகின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராக உள்ள ரோஹித் ஷர்மா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்களால் ‘ஹிட்மேன்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா நாக்பூரில் பிறந்துள்ளார். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வரும் ரோஹித் 2006ல் தியோதர் டிராபியில் மேற்கு மண்டலத்திற்காக லிஸ்ட் ஏ அணியில் அறிமுகமானார். இந்தியாவுக்காக ரோஹித் சர்மா 2007ல் அறிமுகமானார்.

ரோஹித் சர்மா வைத்துள்ள சாதனைகள்

ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் பல தனிப்பட்ட சாதனைகளை வைத்துள்ளார். தற்போது ஐந்து சதங்களுடன் ஒரே தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் முதலிடத்தில் உள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோஹித் பெற்றுள்ளார். தற்போது வரை 5 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக 10,000 ஒருநாள் ரன்களை எட்டிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் ஆனார் ரோஹித் சர்மா.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலகக் கோப்பையை அணியிலும், 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியிலும் ரோஹித் சர்மா இருந்துள்ளார். ரோஹித் 2010, 2016, 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஏசிசி ஆசிய கோப்பையை வென்ற அணியில் இருந்துள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளார். கடந்த பிப்ரவரி 2022ல் ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ரோஹித் சர்மாவின் சிறந்த போட்டிகள்

– கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் 173 பந்துகளில் 33 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 264 ரன்கள் குவித்தார். 

– 2019ல் ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஹித் ஷர்மா 212 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸில் 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடித்தார். 

– 2013 நவம்பரில் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ரோஹித் 158 பந்துகளில் 209 ரன்கள் எடுத்திருந்தார். 12 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் யாரும் தடுக்க முடியாத பேட்ஸ்மேனாக இருந்தார்.

ஐபிஎல்லில் ரோஹித் சர்மா செய்துள்ள சாதனைகள்

– 12 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 60 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் அடித்துள்ளார். 

– 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ரோஹித் ஷர்மா 63 பந்துகளில் 1 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 105 ரன்கள் அடித்தார். 

– 2015ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 65 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 98 ரன்கள் அடித்தார்.

– 2018ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக ரோஹித் ஷர்மா 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 94 ரன்கள் அடித்தார்.

– 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ரோஹித் சர்மா வான்கடே மைதானத்தில் 48 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.