2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புனே: வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறியியல் பல்கலைக்கழகம் (டிஐஏடி), மகாராஷ்டிராவின் புனே நகரில் செயல்படுகிறது. அந்த பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா புனேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:

போருக்கான ஆயுதங்கள், தளவாட உற்பத்தியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பங்களின் உதவியுடன் அதிநவீன ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எதிரி நாடுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதை கண்கூடாக பார்க்கிறோம். வீரர்கள் நேருக்கு நேர் மோதாமல் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் போர் நடைபெறுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு காலத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும். கணினி மற்றும் விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இதற்கு பாதுகாப்புத் துறை கல்வி நிறுவனங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் போருக்கான ஆயுதங்கள், தளவாடங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறை உற்பத்தியில் சுயசார்பை எட்ட வேண்டும். அப்போதுதான் தேசிய நலன், சர்வதேச விவகாரங்களில் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும்.

பாதுகாப்பு தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க வேண்டும். உள்நாட்டில் ஆயுத, தளவாட உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆயுத உற்பத்தியில் நமது தேவையை மட்டுமன்றி நட்பு நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு நாம் முன்னேற வேண்டும்.

பாதுகாப்பு சார்ந்த அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கொண்ட நாடுகளில் பட்டியலில் சர்வதேச அளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

உள்நாட்டில் பிரம்மோஸ் ஏவுகணைகள், இலகுரக போர் விமானங்கள், நவீன துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி ரூ.900 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் ஆயுத ஏற்றுமதி ரூ.16,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதியாகி வருகின்றன. வரும் 2047-ம் ஆண்டில் நாட்டின் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். பிரதமர் மோடியின் கனவின்படி வரும் 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.