நாட்டின் பெயரை கூட மத்திய அரசு மாற்றி விடும்: மம்தா பானர்ஜி அச்சம்

கொல்கத்தா,

டெல்லியில் அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில், அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவை தோற்கடிக்க பிற மாநிலங்களிடம் இருந்து, ஆதரவு கோரும் பணியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார். இதற்காக, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்கு இன்று சென்ற அவர், அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை, நேரில் சந்தித்து பேசினார்.

அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மன் மற்றும் ஆம் ஆத்மியின் பிற தலைவர்களும் சென்றிருந்தனர். இந்த சந்திப்பில், பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. இதில், டெல்லியில் அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் அரசுக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை விடுத்து உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இந்த அரசாங்கம், மத்திய அமைப்புகளின், மத்திய அமைப்புகளால் மற்றும் மத்திய அமைப்புகளுக்கான அரசாக உருமாறி உள்ளது. அரசியலமைப்பை மத்திய அரசு மாற்றி விட கூடும் என நாங்கள் அச்சப்படுகிறோம்.

நாட்டின் பெயரை கூட அவர்கள் மாற்றி விடுவார்கள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளை கூட அவர்கள் மதிக்கவில்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கவர்னர்கள், அவசர சட்டம் மற்றும் கடிதங்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசே ஆட்சி செய்யும்… அதனால், அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நீங்கள் ஒன்றாக பணியாற்ற முடியுமென்றால், ஒரு வாக்கு கூட பா.ஜ.க.வுக்கு போக விட கூடாது. ஒவ்வொருவரும், இந்த அவசர சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. அல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் ஐ.,ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கிற, இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. அப்போது, இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த 11-ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.

எனினும், அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தில், தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தவும், அதற்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்றவும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தீர்மானிக்க வேண்டும். இதற்கு உறுப்பினர் செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவசர சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தால், முதல்-மந்திரி தன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னருக்கு மீண்டும் அதிகாரம் அளிப்பதற்கு இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. இந்த சூழலில், கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் வைத்து, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இரு தினங்களுக்கு முன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை வழங்கினார்.

இதேபோன்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை 23-ந்தேதி அன்று நான் நேரில் சந்திப்பேன். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, ஒவ்வொரு தலைவரையும் சந்தித்து, இந்த சட்ட மசோதாவை தோற்கடிக்க ஆதரவு கேட்பேன் என கூறினார்.

இதன்படி, உத்தவ் தாக்கரேவை 24-ந்தேதியும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை 25-ந்தேதியும் மும்பையில் நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், டெல்லியில் அதிகாரிகளை மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள அவசர சட்டத்திற்கு எதிரான ஆதரவை அவர்களிடம் கேட்க இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது. டெல்லி மாநிலம் பற்றிய மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்போம் என காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் திறனை பா.ஜ.க. அரசு குறைக்கும் செயலாக, இதனை காங்கிரஸ் பார்ப்பதுடன், ஜனநாயகத்தின் அதிகாரம் குறைக்கப்படுவதற்கான முயற்சியாகவும் பார்க்கிறது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.