கஞ்சா வியாபாரம், சமூகத் தகராறு; நீதிமன்றத்தில்வைத்து குருவுக்கு `ஸ்கெட்ச்' போட்ட`ரௌடி' சிஷ்யன்..!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் கொலை முயற்சி வழக்கில் சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமீனில் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில், ஜாமீன் கையெழுத்துப் போடுவதற்காக ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு வந்தபோது, நீதிபதியின் விசாரணை வளாகத்துக்குள்ளேயே புகுந்து பிரபல ரௌடி குமார் என்கிற கொக்கி குமார் வாளால் அசோக்குமாரை வெட்டிவிட்டு, `வெட்டியது யார்னு கேட்டா… கொக்கிகுமார்னு சொல்லணும் புரியுதா’ என நீதிமன்ற ஊழியர்களிடம் வாளைச் சுழற்றியபடி உதார்விட்டுச் சென்றான். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“தப்பி ஓடிய ரௌடியைத் துரிதமாகச் செயல்பட்டு ஐந்து மணி நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துவிட்டோம்” என போலீஸார் சொல்லிக்கொண்டாலும், நீதிமன்றத்தில் நீதிபதி விசாரணை வளாகத்துக்குள்ளேயே புகுந்து கொலைசெய்ய முயலும் அளவுக்குச் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.

ரௌடி கொக்கி குமார்

ராமநாதபுரத்தில் இந்தத் துணிகர கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட கொக்கி குமார் யார்… அசோக்குமாரைக் கொலைசெய்ய முயன்றதற்கான காரணம் என்ன, உள்ளிட்ட கேள்விகளுடன் தகவலறிந்த சிலரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “இவர்கள் இருவரும் சேர்ந்து கஞ்சா விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். கொக்கி குமாருக்கு மூன்றாம் கட்ட அடியாளாக அசோக்குமார் இருந்துவந்திருக்கிறான். கஞ்சா விற்பனை, வழிப்பறி, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என கொக்கி குமாரின் பல குற்றச் சம்பவங்களுக்கு அசோக்குமார் உடந்தையாக இருந்துவந்திருக்கிறான். இதன் காரணமாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் அசோக்குமார் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும், கொக்கி குமார் மீது ராமநாதபுரம் சரகத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் 22-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன.

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம்

இந்த நிலையில் கொக்கி குமார் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளில் அடிக்கடி கைதாகி சிறைக்குச் சென்று வந்திருக்கிறான். அந்தச் சமயங்களில் அசோக்குமார் தனக்கென ஒரு கேங்கை உருவாக்கி தனியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தனது சகாக்கள் மூலம் கொக்கி குமார் தெரிந்துகொண்டு அசோக்குமாரை எச்சரித்திருக்கிறான். இதையடுத்து கொக்கி குமாரிடமிருந்து பிரிந்த அசோக்குமார், தனியாக கஞ்சா வியாபாரத்தைத் தொடங்கியிருக்கிறான். மேலும், கொக்கி குமாரைப் போன்று தனக்கென ஒரு டீமை உருவாக்கிக்கொண்டு புதிய ரௌடியாக ஃபார்மாகி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறான்.

தனக்கு இணையாக, மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த அசோக்குமார் வளர்ந்ததை கொக்கி குமாரால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் இருவருக்குமிடையே தொழில் போட்டியுடன், ஆதிக்கப் போட்டியும் உருவாகி கேங் வாராக மாறியது. இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் குமரய்யாகோவில் பகுதியில் பால் வியாபாரம் செய்துவரும் கொக்கி குமார் கூட்டாளியான சந்துரு, அசோக்குமாரிடம், `இங்கு நாங்கதான் பெரிய ஆளுங்க… நீங்க எங்களுக்குக் கீழ்தான்’ என தகராறில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமாரும், அவரது ஆட்களும் சந்துருவை கடைக்குள் புகுந்து வெட்டியிருக்கின்றனர்.

வெட்டு வாங்கிய ரௌடி அசோக்குமார்

இது குறித்து கேணிக்கரை போலீஸார் அசோக்குமார் உள்ளிட்ட நான்கு பேர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து அசோக்குமாரைக் கைதுசெய்தனர். தன்னுடைய சமுதாய நபரையே வெட்டும் அளவுக்கு அசோக்குமாருக்குத் தைரியம் வந்துவிட்டதா என தன் கூட்டாளிகளிடம் குமுரியதோடு, ‘அசோக்குமாரை வெட்டிக் கொலைசெய்ய வேண்டும், நான்தான் செய்தேன் என எல்லோருக்கும் தெரியும்படி கொலைசெய்வேன். அதைப் பார்த்து நமக்கு எதிராக தலைதூக்கவே ஒவ்வொருத்தனும் பயப்பட வேண்டும்’ என ஆவேசமாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

அதன்படி சிறையிலிருந்து ஜாமீனில் வந்த அசோக்குமாரைக் கொல்ல ஸ்கெட்ச் போட்டு, நீதிபதி வளாகத்துக்குள்ளேயே புகுந்து வெட்டிவிட்டு, தான் நினைத்ததைப்போல பரபரப்பை ஏற்படுத்திவிட்டான்” என்று படபடத்தனர்.

இது குறித்து கேணிக்கரை போலீஸாரிடம் பேசினோம். “கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளியே வந்த கொக்கி குமார், மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தான். திருப்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. அதன்படி திருப்பூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து தேடிவந்தோம். இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி ராமநாதபுரத்துக்கு வந்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், அவனைப் பிடிப்பதற்காகத் தேடினோம்.

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம்

கடந்த 3-ம் தேதி காலை நீதிபதி வளாகத்துக்குள் புகுந்து அசோக்குமாரை வெட்டிவிட்டு, நீதிமன்ற ஊழியர்களிடம் வாளைச் சுழற்றியபடி ‘வெட்டியது யாருன்னு கேட்டா, கொக்கிகுமார்னு சொல்லணும் புரியுதா’ என மிரட்டும் தொனியில் கூறிவிட்டு, பைக்கில் தப்பியிருக்கிறான்.

தகவலறிந்து உடனடியாகச் சம்பவம் நடந்த ஜே.எம் 2 நீதிமன்றத்துக்குச் சென்றோம். அங்கு வெட்டுக் காயத்துடன் கிடந்த அசோக்குமாரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தோம். பின்னர் அங்கு விரைந்து வந்த எஸ்.பி தங்கதுரை, குற்றவாளியை அன்று மாலைக்குள் கண்டுபிடித்துக் கைதுசெய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி கொக்கி குமாரின் செல்போன் எண்ணைப் பின்தொடர்ந்து சென்றோம்.

பின்னர் கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்த சிசிடிவி கேமராவில் கொக்கி குமார் மட்டும் ராமேஸ்வரம் சாலையில் பைக்கில் தப்பிச் செல்வது தெரிந்தது. உடனடியாக உச்சிப்புளி, மண்டபம் போலீஸாரை அலர்ட் செய்துவிட்டு பின்தொடர்ந்து விரட்டிச் சென்றோம். கொக்கி குமாரை உச்சிப்புளியைத் தாண்டவிடவில்லை. எனவே, இந்த சரவுண்டிங்கில்தான் போலீஸுக்கு பயந்து பதுங்கியிருக்கக் கூடும் என அதிவிரைவுப்படை போலீஸார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினோம். அப்போது உச்சிப்புளியிலுள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த கொக்கி குமாரைச் சுற்றி வளைத்துப் பிடித்தோம். எங்களிடமிருந்து தப்பிப்பதற்காக, தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் போலீஸாரைக் கண்மூடித்தனமாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடினான். இதில் ஆய்வாளர் ஆடிவேல், உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோருக்குக் கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கொக்கிகுமார்

இதையடுத்து தற்காப்புக்காக ஆய்வாளர் ஆடிவேல் துப்பாக்கியால் கொக்கிகுமாரை இரண்டு முறை சுட்டார். முதல் குண்டு அவன்மீது படவில்லை, இரண்டாவது குண்டு அவனது வலது முழங்காலுக்குக் கீழே பட்டதில் சுருண்டு விழுந்தான். உடனடியாக அவனை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுவந்து சேர்த்தோம். சம்பவம் நடந்து ஐந்து மணி நேரத்தில் முக்கியக் குற்றவாளியான கொக்கி குமாரைப் பிடித்திருக்கிறோம். அசோக்குமாரை வெட்டுவதற்கு முன்பாக அன்று அதிகாலை அவனுடைய கூட்டாளிகள் இருவரை வெட்டிக் கொலைசெய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது” என்றனர்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் பேசினோம். “முன்விரோதத்தில் இந்தக் கொலை முயற்சி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குற்றவாளி கொக்கி குமாரைச் சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்தில் பிடித்திருக்கிறோம். போலீஸைத் தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றதன் காரணமாகவே வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட வேண்டிய கட்டாயம் போலீஸாருக்கு ஏற்பட்டிருக்கிறது. இருந்தும் உயிருக்கு ஆபத்து ஏற்படாதபடி முழங்காலுக்குக் கீழே சுட்டுப் பிடித்திருக்கின்றனர். இதில் போலீஸார் இருவரும் காயமடைந்திருக்கின்றனர். குற்றவாளி கொக்கி குமார் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம்.

கொக்கி குமார் தாக்கியதில் படுகாயமடைந்த போலீஸார்

மேலும் இதில் தொடர்புடைய சண்முகநாதன், அஜித் ஆகியோரையும் கைதுசெய்திருக்கிறோம். ராமநாதபுரத்தில் ரௌடியிசத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ரௌடிகளின் ‘லிஸ்ட்’ எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ரௌடியிசத்தில் ஈடுபட்டால் அவர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்” எனக் கூறினார்.

முன்னதாக துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனைக்கு போலீஸாரால் அழைத்துவரப்பட்ட கொக்கி குமாரை வீடியோ, புகைப்படங்கள் எடுத்த செய்தியாளர்களிடம், “என்னோட சாதிக்காகவும், ஊருக்காகவும்தான் இந்தச் சம்பவத்த செஞ்சேன்… கஞ்சா வியாபாரம்னு போடக் கூடாது, அப்படி போட்டீங்கன்னா அவ்வளோதான் பாத்துக்கோங்க” என மிரட்டியபடி சென்றான்.

ராமநாதபுரம் வழக்கறிஞர் கே.ஜி.கணேசன் நம்மிடம் இது குறித்துப் பேசுகையில், “ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீதிமன்றத்துக்குச் செல்லவே பயமாக இருக்கிறது. நீதிபதி தீர்ப்பு வழங்கும் வளாகத்துக்குள்ளே புகுந்து துணிச்சலாகக் கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது நீதிபதிக்கும், எங்களுக்கும் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை தெளிவாக்கியிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எப்படி குற்றவாளிக்கு நீதிபதிகள் தைரியமாக தண்டனை வழங்க முடியும், குற்றவாளிக்கு எதிராக நாங்கள் எப்படி வாதாட முடியும்.

ராமநாதபுரம் வழக்கறிஞர் கே.ஜி.கணேசன்

தனக்கு எதிராக தீர்ப்பு சொல்லவே நீதிபதிகள் பயப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தச் சம்பவத்தை நீதிமன்றத்துக்குள் அரங்கேற்றியிருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இந்த அளவுக்குச் சீர்கெட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு நீதிமன்றங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தி நீதிபதிகள், வழக்கறிஞர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொக்கி குமாருக்கு ஆதரவாக ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டோம் என வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.