புதுச்சேரி காவலர் தேர்வில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்ச்சி – கேக் வெட்டி வாழ்த்திய ஊர் மக்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் காவலர் தேர்வில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்ச்சி பெற்றதையடுத்து கிராமத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். தேர்ச்சி பெற்றவர்கள் பொதுமக்கள், பெற்றோர் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர்.

புதுவை மாநிலத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக புதுவை காவல்துறையில்
உள்ள 253 காவலர் மற்றும் 26 ஓட்டுநர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் உடற்தகுதித் தேர்வுகள் கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றன. இதில் ஆண்கள், பெண்கள் என 6871 பேர் பங்கேற்ற நிலையில் எழுத்துத் தேர்வுக்கு 3,107 பேர் தகுதி பெற்றனர்.

உடற்தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கான எழுத்துத் தேர்வு 9 மையங்களில் நடைபெற்றன. அதில் ஆண்கள் 2065 பேரும், பெண்கள் 1003 பேரும் பங்கேற்று தேர்வெழுதினர். உடற்தகுதி, எழுத்துத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கூட்டப்பட்டு, தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஆண்களில் 169 பேர் தேர்வாகியுள்ளனர். பெண்களில் 81 பேர் தேர்வாகியுள்ளனர்.

மொத்தம் உள்ள 253 பணியிடங்களுக்கான தேர்வுகளில் 250 பேர் தேர்ச்சியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தொகுதியான மண்ணாடிப்பட்டிலுள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையொட்டி கிராம மக்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், ” எங்கள் கிராமத்தில் இதுவரை 75 பேர் காவல்துறை பணியில் இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். இம்முறை கிராமத்தில் எம்சிஏ, பிஎச்டி, பட்டப்படிப்பு படித்த 32 பேர் காவல்துறை தேர்வு எழுதினர். தேர்வு எழுதி பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர் வீட்டு குழந்தைகளாக இருந்தனர். பலரும் தனியார் நிறுவன வேலையை விட்டு, விவசாய பணிக்கு சென்றவாரே படித்தனர்.

இத்தேர்வு முடிவுக்காக பலரும் காத்திருந்தோம். தற்போது தேர்வு எழுதியோரில் 11 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக தமிழகத்தில் காவல்துறை பணிக்கு தேர்வாகி சில ஆண்டுகள் பணியாற்றி அப்பணியை ராஜினாமா செய்துவிட்டு இத்தேர்வில் வென்றுள்ளவரும் உள்ளார்” என்றனர்.

புதுச்சேரியில் ஒரே கிராமத்தில் இருந்து தேர்வான 11 பேருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேர்வில் வென்றோர் பொதுமக்கள், தங்கள் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

தேர்வில் வென்றோர் கூறுகையில், “ஊர் மக்கள் யாராக இருந்தாலும், நாங்கள் எங்காவது சென்றாலும் படிக்காமல் ஏன் இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பார்கள். கட்டிட வேலை, வயல் வேலை, தனியார் நிறுவன வேலை என பல வேலைக்கு சென்றாலும் ஓய்வு நேரத்தில் படித்தோம். ஒன்றாகவே படித்தோம். கடைசி இரண்டு மாதம் வேலையை விட்டுவிட்டு, படித்தோம். தேர்வான பலரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. எங்கள் ஊரில் அதிகமானோர் வென்றுள்ளது மகிழ்ச்சி. தோல்வியடைந்தோரும் அடுத்த முறை வெல்வார்கள்.” என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.